நெல்லையில் பொதுமக்கள் திடீர் சாலைமறியல்- மழைநீரை விரைவாக அகற்ற வலியுறுத்தல்
மழைநீரை விரைவாக அகற்ற வலியுறுத்தி நெல்லை டவுனில் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லை:
மழைநீரை விரைவாக அகற்ற வலியுறுத்தி நெல்லையில் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வீடுகளை மழைநீர் சூழ்ந்தது
நெல்லையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் டவுன் காட்சி மண்டபம் பகுதி, முகமது அலி தெரு, ஜவஹர் தெரு, பாட்டப்பத்து உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் பல வீடுகள் சேதமடைந்தன. இந்த நிலையில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக கலெக்டர் விஷ்ணு, சிறப்பு கண்காணிப்பு அதிகாரி அபூர்வா உள்ளிட்டோர் டவுன் பகுதிக்கு நேற்று காலை சென்றனர்.
அப்போது அவர்களிடம் வீடுகளை சூழ்ந்த மழை நீரை வடியவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தங்களது கோரிக்கை குறித்து எடுத்துக் கூறுவதற்காக பொதுமக்கள் அவர்கள் சென்ற வழியில் நின்று கொண்டு இருந்தனர். ஆனால் அவர்கள் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதை கண்டித்தும், மழைநீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் அப்பகுதியில் மக்கள் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நெல்லை செயலாளர் முனவர் முகமது பிஜிலி, டவுன் நகர தலைவர் செய்யது காதர், எஸ்.டி.பி.ஐ. கட்சி நெல்லை தொகுதி செயலாளர் முகமது கவுஸ், தொகுதி துணைத்தலைவர் காஜா, டவுன் நகர தலைவர் பீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மழைநீரை வடிய வைக்கவும், பாதிப்புகளை சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story