விதவை பெண்ணை சயனைடு மாத்திரை கொடுத்து கொன்று கால்வாயில் உடல் வீச்சு


விதவை பெண்ணை சயனைடு மாத்திரை கொடுத்து கொன்று கால்வாயில் உடல் வீச்சு
x
தினத்தந்தி 29 Nov 2021 2:22 AM IST (Updated: 29 Nov 2021 2:22 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், மாயமானதாக தேடப்பட்ட விதவை பெண்ணை 2 பேர் சயனைடு மாத்திரை கொடுத்து கொன்று உடலை கால்வாயில் வீசியது அம்பலமாகி உள்ளது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

பெங்களூரு:

விதவை பெண் மாயம்

  ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் மந்த்ராலயாவை சேர்ந்தவர் சீதா(வயது 47). இவர் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் சீதா பெங்களூரு ராஜாஜிநகர் ராமமோகனபுரா பகுதியில் வசித்து வரும் சகோதரியின் வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் ஆந்திராவுக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டு சென்றார். ஆனால் அவர் ஆந்திராவுக்கு செல்லவில்லை. இதனால் அவரை குடும்பத்தினர் தேடினர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை.

  இந்த நிலையில் சீதா மாயமாகிவிட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தரும்படியும் சீதாவின் தம்பியும், மந்த்ராலயா கோவில் அர்ச்சகருமான வெங்கடேஷ் ஆச்சார் என்பவர் பெங்களுரு சுப்பிரமணியநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். அதன்பேரில் மாயமான சீதாவை போலீசார் தேடிவந்தனர். ஆனால் அவரை பற்றிய எந்த துப்பும் கிடைக்கவில்லை.

கால்வாயில் உடல் வீச்சு

  இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சுப்பிரமணியநகர் போலீஸ் நிலையம் வந்த வெங்கடேஷ் ஆச்சார், மந்த்ராலயா பகுதியை சேர்ந்த சிலர் என்னை கடத்தி சென்றனர். அவர்கள் என்னை மிரட்டி சொத்துகளை எழுதி வாங்கி கொண்டு பின்னர் விடுவித்தனர். இதனால் அந்த கும்பல் தான் எனது அக்காள் சீதாவையும் கடத்தி சென்று இருக்க வேண்டும் என்று கூறினார். அவர் கூறிய தகவலின் அடிப்படையில் கர்னூலை சேர்ந்த நூர் அகமது, சத்யநாராயணா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

  அப்போது அவர்கள் 2 பேரும் சேர்ந்து சீதாவை பெங்களுருவில் இருந்து ஹாசனுக்கு காரில் கடத்தி சென்றதையும், காரில் சென்ற போது சீதாவுக்கு சயனைடு மாத்திரையை வலுக்கட்டாயமாக கொடுத்ததையும், இதில் அவர் உயிரிழந்ததையும் ஒப்புக்கொண்டனர். மேலும் சீதாவின் உடலை விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டேயில் ஓடும் கால்வாயில் வீசியதையும் ஒப்புக்கொண்டனர்.

குடும்பத்தினரிடம் விசாரணை

  ஆனாலும் சீதாவை கொலை செய்த காரணம் பற்றி அவர்கள் போலீசாரிடம் கூறவில்லை. மேலும் இந்த கொலையில் 4 பேருக்கு தொடர்பு இருப்பதும், சீதாவை கொலை செய்ய ரூ.4½ லட்சம் கொடுக்கப்பட்டதும் தெரியவந்து உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் சீதாவின் குடும்ப சொத்துகள் பிரிக்கப்பட்டு உள்ளது. அப்போது சீதாவுடன் பிறந்தவர்கள் குடும்ப சொத்துகளை விற்க முயன்று உள்ளனர்.

  இதற்கு சீதா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இந்த பின்னணியில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். மேலும் சீதாவின் குடும்பத்தை சேர்ந்தவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story