பள்ளி-கல்லூரிகளில் சமூக-கலாசார நிகழ்ச்சிகளை நடத்த தடை - கர்நாடக அரசு உத்தரவு
கர்நாடகத்தில், பள்ளி-கல்லூரிகளில் சமூக-கலாசார நிகழ்ச்சிகளை நடத்த தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
ஒமிக்ரான் வைரஸ்
தென்ஆப்பிரிக்காவில் 2 பேருக்கு ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளது. ஹாங்காங், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கும் அது பரவியுள்ளது. அது அதிதீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும் தன்மையை கொண்டது என்பதால், உலக நாடுகளுக்கு, உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே தார்வாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியிலும், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியிலும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கல்வி நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளில் சமூக-கலாசார நிகழ்ச்சிகளை நடத்த தற்காலிக தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில அரசின் சுகாதாரத்துறை புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
கலாசார நிகழ்ச்சிகள்
கர்நாடகத்தில் மருத்துவ கல்லூரி, துணை மருத்துவ படிப்புகளில் படிக்கும் மாணவர்களின் உடல்நிலையை தினமும் பரிசோதிக்க வேண்டும். அதில் யாருக்காவது கொரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்களை உடனடியாக பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அத்தகையவர்களை அரசின் விதிமுறைகள்படி நடத்த வேண்டும். பள்ளி-கல்லூரிகளில் சமூக-கலாசார நிகழ்ச்சிகளை நடத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது. 2 மாதங்களுக்கு பிறகு அரசு இதுபற்றி அறிவிப்பு வெளியிடும். அதன்பிறகு பள்ளி-கல்லூரிகளில் சமூக-கலாசார நிகழ்ச்சிகளை நடத்த்க் கொள்ளலாம்.
கல்வி நிறுவனங்களில் மாநாடுகள், கருத்தரங்குகள், கல்வி நிகழ்ச்சிகள் போன்றவற்றையும் முடிந்தரை ஒத்திவைப்பது நல்லது. இத்தகைய நிகழ்ச்சிகளை ஆன்லைன் மூலமாக நடத்தலாம். கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், தங்களின் நிறுவன வளாகத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக நிகழ்ச்சிகளில் இதை தீவிரமாக பின்பற்ற வேண்டும்.
மாணவர்களுக்கு கொரோனா
பொது சுகாதார நலன் கருதி மருத்துவத்துறை நிபுணர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டும் நோக்கத்தில் தங்களின் நிகழ்ச்சிகிளை அடுத்த சில மாதங்களுக்கு டிஜிட்டல் முறையில் நடத்த வேண்டும். 18 வயது முடிவடைந்த மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவதை கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அரசு தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story