கர்நாடகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவவில்லை - பசவராஜ் பொம்மை தகவல்
கேரள எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரமாக நடந்து வருவதாகவும், மாநிலத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார். மேலும் அவர் கர்நாடகத்தில் இதுவரை ஒமிக்ரான் வைரஸ் பரவவில்லை என்றும் கூறினார்.
பெங்களூரு:
தீவிர கண்காணிப்பு
தென்ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அது இங்கிலாந்து, இஸ்ரேல் உள்பட பிற நாடுகளுக்கும் பரவியுள்ளது. இது அதிகவேகமாக பரவக்கூடிய தன்மையை கொண்டதால், உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கேரளாவில் இருந்து கர்நாடகத்திற்கு வருபவர்களால் இங்கு கொரோனா பரவல் அதிகரிப்பது மேல்நோட்டமாக தெரியவந்துள்ளது. கேரளாவில் இருந்து வரும் துணை மருத்துவ பணியாளர்களால் தொற்று பரவுகிறது. அதனால் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தட்சிண கன்னடா, சாம்ராஜ்நகர், மைசூரு எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்எச்சரிக்கை நடவடிக்கை
அதனால் கேரளாவில் இருந்து வருபவர்கள் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா இல்லை என்ற நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கர்நாடகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். அத்துடன் அவர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். மாநிலத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
தென்ஆப்பிரிக்கா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் பரவுகிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புதிய வகை கொரோனா பரவுவதை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தில் இதுவரை அந்த புதிய வகை கொரோனா பரவவில்லை.
புதிய வகை கொரோனா
தார்வார், மைசூரு, பெங்களூரு ஆகிய நகரங்களில் உள்ள மாணவர் விடுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அந்த விடுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்கு தங்கியிருக்கும் அனைத்து மாணவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தார்வார் எஸ்.டி.எம். மருத்துவ கல்லூரியில் டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
அந்த மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மைசூருவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவித்து அதை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். புதிய வகை கொரோனா பரவியுள்ள தென்ஆப்பிரிக்கா உள்பட 3 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
தடுப்பூசி கட்டாயம்
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு ‘பூஸ்டர்' டோஸ் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்குமாறு கேட்டு இருக்கிறோம். வணிக வளாகம், மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள் மற்றும் அரசு-தனியார் அலுவலகங்களில் 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும். அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் அரசு சார்பில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி போடப்படும்.
கடந்த 16 நாட்களில் கேரளாவில் இருந்து கர்நாடகம் வந்த மாணவர்களை மீண்டும் ஒரு முறை கொேரானா பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும், மீண்டும் ஒரு முறை அவர்களுக்கு
பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முறை புத்தாண்டு கொண்டாட்டத்தை அனுமதிப்பது குறித்து வரும் நாட்களில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
91 சதவீதம் பேருக்கு...
மேல்-சபை தேர்தல் பிரசாரத்தில் கொரோனா தடுப்பு வழிகாட்டுதலை பின்பற்றும்படி அறிவுறுத்தி உள்ளேன். மாநிலத்தில் தற்போது 80 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. மாநிலத்தில் இதுவரை 91 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளோம். டிசம்பர் மாத இறுதிக்குள் 70 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Related Tags :
Next Story