கராத்தே மாஸ்டர் சிறையில் அடைப்பு


கராத்தே மாஸ்டர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 29 Nov 2021 8:31 AM GMT (Updated: 29 Nov 2021 8:31 AM GMT)

கராத்தே மாஸ்டர் சிறையில் அடைப்பு

பெத்தநாயக்கன்பாளையம், நவ.29-
கருமந்துறையில் பாலியல் தொல்லையால் பிளஸ்-2 மாணவி தற்கொலைக்கு முயன்ற வழக்கில் கைதான கராத்தே மாஸ்டர் சிறையில் அடைக்கப்பட்டார். கைதான பள்ளி தாளாளர் கோர்ட்டில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கராத்தே மாஸ்டர் கைது
சேலம் மாவட்டம், கருமந்துறையில் தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார் தொடர்பான வழக்கில் அந்த பள்ளியின் கராத்தே மாஸ்டர் ராஜா நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும் மாணவியின் புகார் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளி தாளாளர் ஸ்டீபன் தேவராஜூம் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர்கள் இருவரையும் ஆத்தூர் கோர்ட்டில் நேற்று போலீசார் ஆஜர்படுத்தினர். ஆனால் போக்சோ சட்டப்பிரிவிலான வழக்குகளுக்கு என்று சேலத்தில் தனி நீதிமன்றம் உள்ளதால் அங்கு இவர்கள் இருவரையும் ஆஜர்படுத்துமாறு நீதிபதி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
மயங்கி விழுந்த பள்ளி தாளாளர்
அப்போது பள்ளியின் தாளாளர் ஸ்டீபன் தேவராஜ் கோர்ட்டுக்குள்ளேயே நீதிபதியின் முன்னிலையில் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவர் கார் மூலம் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். 
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் கைதி என்பதால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 
இதனிடையே கைதான கராத்தே மாஸ்டர் ராஜாவை சேலம் போக்சோ கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். ராஜாவை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் ராஜா ஆத்தூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். 
போக்சோ வழக்கில் கைதான பள்ளி தாளாளர், நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்திய போது மயங்கி விழுந்த சம்பவம் ஆத்தூர் கோர்ட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story