எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் கைது


எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் கைது
x
தினத்தந்தி 29 Nov 2021 8:31 AM GMT (Updated: 29 Nov 2021 8:31 AM GMT)

எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் கைது

சேலம், நவ.29-
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்த வழக்கில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணியை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இது பற்றிய விவரம் வருமாறு:-
உதவியாளர் மணி
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்தவர் மணி (வயது 45). இவர், முன்னாள் முதல்-அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சியின் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் உதவியாளராக கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வந்தார்.
இந்த நிலையில், கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்த என்ஜினீயர் தமிழ்செல்வன் என்பவர், எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணி மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
ரூ.17 லட்சம் மோசடி
அதில், நண்பர் ஒருவர் மூலம் மணியிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு வேலை வாங்கி தரும்படி கூறினேன். அப்போது அவர் பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார். இதைநம்பி அவரிடம் ரூ.17 லட்சம் கொடுத்தேன். ஆனால் வேலை எதுவும் வாங்கி தரவில்லை. 
இதனால் கடந்த சில மாதங்களாக அவரிடம் அரசு வேலை வேண்டாம். கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டேன். ஆனால் அவர் கொடுக்க மறுத்து வந்தார். எனவே, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்து ஏமாற்றிய மணி மற்றும் புரோக்கராக செயல்பட்ட அ.தி.மு.க. பிரமுகர் செல்வக்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
வழக்குப்பதிவு
இந்த மனு மீது விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு  போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் உத்தரவிட்டார். இதையடுத்து மணி மற்றும் செல்வக்குமார் ஆகியோர் மீது கூட்டு சதி, பண மோசடி செய்ததாக 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 
அதன்பிறகு அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணி, செல்வக்குமார் ஆகியோர் சேலம் கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். ஆனால் அந்த மனுக்கள் தள்ளுபடியானது. 
அதேசமயம் நடுப்பட்டி மணி, சென்னை ஐகோர்ட்டிலும் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதையடுத்து தலைமறைவான மணி மற்றும் செல்வக்குமார் ஆகியோரை பிடிக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு இளமுருகன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் அவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
கைது நடவடிக்கை
இந்த நிலையில், நேற்று அதிகாலை ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு மணி வந்தபோது, தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு இளமுருகன் தலைமையிலான போலீசார் மணியை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது கூட்டாளியான செல்வக்குமாரை பிடிக்கவும் தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதனிடையே சேலம் உள்பட பல்வேறு இடங்களை சேர்ந்த 25 பேரிடம் ரூ.1 கோடியே 17 லட்சம் பெற்று மோசடி செய்ததாக மணி மீது மேலும் சிலர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து புகார் மனுக்கள் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்பேரிலும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
 அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி புகாரில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story