கடத்தூர் அருகே தார்சாலை அமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்
கடத்தூர் அருகே தார்சாலை அமைக்க கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மொரப்பூர்:
கடத்தூர் அருகே தார்சாலை அமைக்க கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
கடத்தூர் ஒன்றியம், குருபரஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட பாலசமுத்திரத்தில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தார்சாலை வசதி இல்லை. இதனால் சாலை வசதி செய்து தரக்கோரி கிராம மக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தனர். ஆனால் சாலை அமைக்கப்படவில்லை. சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக மண் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியது.
இந்தநிலையில் தார்சாலை அமைக்க கோரி கிராமமக்கள் ராமியனஅள்ளி- தர்மபுரி சாலையில் நேற்று திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், ரங்கநாதன் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், குருபரஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் காந்தி, துணை தலைவர் பார்த்தீபன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உரிய நடவடிக்கை
அப்போது அவர்கள் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக தார்சாலை வசதி இல்லாமல் தவித்து வருகிறோம். செல்லியம்மன் நகரில் இருந்து பால சமுத்திரத்திற்கு 3 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். இந்த சாலை மண்சாலை என்பதால் மழைக்காலங்களில் குண்டும், குழியுமாகவும், சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் தார்சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story