தளி அருகே கிராமத்துக்குள் புகுந்த காட்டுயானை பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
தளி அருகே கிராமத்துக்குள் காட்டுயானை புகுந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.
தேன்கனிக்கோட்டை:
தளி அருகே கிராமத்துக்குள் காட்டுயானை புகுந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.
காட்டுயானை
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கண்டகானப்பள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானை மலசோனை பகுதியில் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்று அட்டகாசம் செய்து வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து அந்த யானையை வனப்பகுதிக்கு விரட்டினர்.
இந்த நிலையில் நேற்று காலை இந்த யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி தளி அருகே உள்ள கொல்லப்பள்ளி கிராமத்துக்குள் புகுந்தது. அங்கு விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்திய அந்த யானை கிராமத்தில் பிரதான சாலையில் ஆக்ரோஷத்துடன் சுற்றித்திரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடி வீடுகளில் புகுந்து கொண்டனர்.
வனத்துறையினர் வேண்டுகோள்
அதனைத்தொடர்ந்து அந்த காட்டுயானை கிராமத்தில் இருந்து வயல் வெளிகளுக்குள் சென்றது. காட்டுயானை நடமாட்டம் குறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பட்டாசுகள் வெடித்து காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் அந்த காட்டுயானை வனப்பகுதிக்குள் சென்றது. கிராமப்பகுதிகளில் காட்டுயானை சுற்றித்திரிவதால் கொல்லப்பள்ளி, பாளையம்கோட்டை, அகலக்கோட்டை, மேடுமுத்துக்கோட்டை உள்ளிட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story