தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும்(செவ்வாய்க்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுப்பட்டுள்ளது
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுப்பட்டுள்ளது
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) 4-வது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
விடுமுறை
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 25-ந் தேதி அதிகனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. அதனை தொடர்ந்து வந்த நாட்களில் மிதமான மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பள்ளிக்கூட வளாகங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனால் இன்றும் 4-வது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று உத்தரவிட்டார்.
35 ஆயிரம் கன அடி
மேலும் பாபநாசம், சேர்வலாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று பாபநாசம் அணையில் இருந்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று இரவு மருதூர் அணைக்கட்டை வந்தடைந்தது. தொடர்ந்து இரவு 10 மணி அளவில் ஸ்ரீவைகுண்டம் அணையை அடைந்தது. அங்கிருந்து அணையை கடந்து சுமார் 35 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலுக்கு சென்றது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து சென்றது.
இதைத் தொடர்ந்து ஆற்றங்கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். மேலும் வருவாய்த்துறை, போலீஸ் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர். இந்த தண்ணீர் சில மணி நேரங்களில் கடலுக்கு சென்று விடும். அதன்பிறகு ஆற்றில் வெள்ளம் படிப்படியாக குறைந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடம்பாகுளம்
இதே போன்று தாமிபரணி வடிநில கோட்ட குளங்கள் அனைத்தும் மறுகால் பாய்ந்து வருகிறது. இதனால் கடம்பா குளத்தில் இருந்து 600 கன அடியும், பெருங்குளத்தில் இருந்து 1000 கன அடி தண்ணீரும், கோரம்பள்ளம் குளத்தில் இருந்து 1000 கன அடி தண்ணீரும் கடலுக்கு சென்று கொண்டு இருக்கிறது. கடம்பா மறுகாலில் செல்லும் தண்ணீர், அந்த பகுதியில் வயல்களில் தேங்கி உள்ள தண்ணீருடன் சேர்ந்து சுமர் 1500 கன அடி தண்ணீர் தண்ணீர்பந்தல் அருகே தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டை மூழ்கடித்தபடி செல்கிறது.
Related Tags :
Next Story