படகு இல்லத்தில் அகற்றிய கடைகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்
படகு இல்லத்தில் அகற்றிய கடைகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று ஊட்டியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் வியாபாரிகள் மனு அளித்தனர்.
ஊட்டி
படகு இல்லத்தில் அகற்றப்பட்ட கடைகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று ஊட்டியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் வியாபாரிகள் மனு அளித்தனர்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் எஸ்.பி.அம்ரித் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து தங்களது கோரிக்கை, குறைகளை மனுக்களாக அளித்தனர்.
அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது. பின்னர் ஒப்புகை சீட்டுகள் வழங்கப்பட்டன. மேலும் அலுவலக வளாகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்காக முகாம் நடந்தது.
கடைகளுக்கு மாற்று இடம்
கூட்டத்தில் ஊட்டி படகு இல்ல வியாபாரிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், படகு இல்ல வளாகத்தில் நாங்கள் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வந்தோம். 48 வியாபாரிகளுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்டது. கடை நடத்த அதற்கான வாடகை செலுத்தி வந்தோம்.
இதற்கிடையே கடந்த மாதம் கடைகள் அகற்றப்பட்டது. பின்னர் ஒரு மாதமாக வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறோம். கடைகளை நம்பி பிழைப்பு நடத்தினோம். ஆகவே எங்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
சான்றிதழ்
பொதுமக்களிடம் இருந்து 142 மனுக்கள் பெறப்பட்டது. 6 பேருக்கு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து நீலகிரியில் கொரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலெக்டர் எஸ்.பி.அம்ரித் ஊட்டி, குன்னூர், கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களில் 13 கிராம ஊராட்சி தலைவர்கள், தொண்டு நிறுவனத்தினர், தன்னார்வலர்கள் என மொத்தம் 65 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
பாராட்டுக்குரிய பணி
பின்னர் அவர் பேசும்போது, வீடு, வீடாக சென்று கொரோனா குறித்து விழிப்புணர்வு பணி, முழு ஊரடங்கில் தேவையான உணவு வசதி செய்து கொடுத்தல், தூய்மை பணிகள், நோய் கட்டுப்பாடு பகுதிகளில் வசித்தவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல் போன்றவற்றில் சிறப்பாக பணியாற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு உறுதுணையாக இருந்த உங்கள் பணி பாராட்டுக்குரியது என்றார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story