தூத்துக்குடியில் 5வது நாளாக வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்
தூத்துக்குடியில் 5வது நாளாக வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் 5-வது நாளாக வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
வடியாத வெள்ளம்
தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை ெவளுத்து வாங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது. கடந்த 25-ந்தேதி பெய்த அதி கனமழையால் தூத்துக்குடி மாநகர் வெள்ளத்தில் தத்தளித்தது. 5 நாட்களாகியும் மாநகரில் பல்வேறு இடங்களில் வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் பெய்த தொடர் மழையால் பல்வேறு இடங்களிலும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததுள்ளது. விவசாய நிலங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கடந்த 4 நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது.
தண்ணீரை அகற்றும் பணி மும்முரம்
இந்த நிலையில் தூத்துக்குடியில் நேற்று பகலில் வெயில் லேசாக தலைகாட்டியது. மதியத்துக்கு பிறகு வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. தூத்துக்குடி மாநகர பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்து தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மாநகரில் பெரும்பாலான இடங்களில் தேங்கிய மழைநீர் வடியத் தொடங்கி உள்ளது.
எனினும் பிரையண்ட் நகர், குறிஞ்சி நகர், முத்தம்மாள் காலனி, ராம் நகர், ரகுமத் நகர், தனசேகரன் நகர், கதிர்வேல் நகர், முல்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் 5 நாட்கள் ஆகியும் இன்னும் மழைநீர் வடியவில்லை. இதனால் அத்தியாவசிய தேவைக்கு வெளியில் சென்று வருவதற்கு அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
நோய் பரவும் அபாயம்
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி வளாகத்திலும் மழைநீர் தேங்கி உள்ளது. அதனை வெளியேற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி அம்பேத்கர் நகர் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீருடன் கழிவுநீரும் கலந்ததால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
மாநகரில் தாழ்வான இடங்களில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. 200-க்கும் மேற்பட்ட இடங்களில் 313 மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீரை உறிஞ்சி அகற்றப்படுகிறது.
உருக்குலைந்த சாலைகள்
அதேபோன்று டேங்கர் லாரிகள் மூலமும் மழைநீர் உறிஞ்சி வெளியேற்றப்படுகிறது. பல இடங்களில் சாலைகளை உடைத்தும், ராட்சத குழாய்கள் பொருத்தியும் மழைநீரை வெளியேற்றும் பணிகள் நடைபெறுகிறது.
இதனால் பல இடங்களில் சாலைகள் உருக்குலைந்து காணப்படுகின்றன. மேலும் சில நாட்கள் மழை பெய்யாமல், இதே நிலை நீடித்தால் ஓரிரு நாட்களில் மழைநீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மழை அளவு விவரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
திருச்செந்தூர்-28, காயல்பட்டினம்-7, குலசேகரன்பட்டினம்-29, விளாத்திகுளம்-23, காடல்குடி-5, வைப்பார்-17, சூரங்குடி-21, கோவில்பட்டி-20, கழுகுமலை-32, கயத்தாறு-12, கடம்பூர்-10, ஓட்டப்பிடாரம்-20, மணியாச்சி-15, கீழ அரசடி-8, எட்டயபுரம் -32.1, சாத்தான்குளம் -13.4, ஸ்ரீவைகுண்டம் -20.5, தூத்துக்குடி -6.6 மில்லி மீட்டர்.
Related Tags :
Next Story