பாலியல் புகாரில் சிக்கிய கல்லூரி தாளாளர் மீண்டும் சிறையில் அடைப்பு
பாலியல் புகாரில் சிக்கிய கல்லூரி தாளாளரிடம், 3 நாள் போலீஸ் காவலில் விசாரணை முடிந்ததால் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
திண்டுக்கல்:
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
திண்டுக்கல் அருகே உள்ள முத்தனம்பட்டியில் தனியார் நர்சிங், கேட்டரிங் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரியில் தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் மாணவிகளுக்கு, கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதற்கு விடுதி வார்டன் அர்ச்சனா உடந்தையாக இருந்ததாகவும் கூறி, மாணவ-மாணவிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர்.
மேலும் கல்லூரி தாளாளர் மீது 3 மாணவிகள் தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டம், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுதி வார்டன் அர்ச்சனாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதோடு தலைமறைவான தாளாளர் ஜோதிமுருகனை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
கல்லூரி தாளாளரிடம் விசாரணை
இதற்கிடையே கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் கடந்த 23-ந்தேதி, திருவண்ணாமலை மாவட்டம் போளூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். இதையடுத்து அவர், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரை கடந்த 26-ந்தேதி தாடிக்கொம்பு போலீசார் அழைத்து வந்து, திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அப்போது வழக்கு தொடர்பாக விசாரிக்க அவரை 3 நாட்கள் போலீசார் காவலில் எடுத்தனர். மேலும் அவரை திண்டுக்கல்லில் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்தனர். அதோடு பாலியல் தொல்லை நடந்ததாக கூறப்பட்ட கல்லூரிக்கு அழைத்து சென்றும் விசாரணை நடத்தினர்.
மேலும் போலீஸ் காவல் முடிந்ததால் நேற்று திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் மீண்டும் அவரை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை வருகிற 10-ந்தேதி வரை சிறையில் அடைக்கும்படி நீதிபதி புருஷோத்தமன் உத்தரவிட்டார். அதன்பேரில் அவர் பழனி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story