கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற அவகாசம்
வடமதுரையில் கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற கால அவகாசம் அளிக்கப்பட்டது.
வடமதுரை:
வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் 28 சென்ட் நிலம் வடமதுரை-திண்டுக்கல் 4 வழிச்சாலையில் உள்ளது. அந்த நிலத்தில் பொதுமக்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து 9 குடிசைகளில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேறு பகுதியில் மாற்று இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர்கள் தொடர்ந்து அங்கேயே வசித்து வந்ததால் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா, வேடசந்தூர் சரக ஆய்வாளர் ரஞ்சனி, வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஆக்கிரமிப்பை அகற்ற சென்றனர்.
அப்போது அங்குள்ள பொதுமக்கள் வீடுகளை காலி செய்வதற்கு கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து வருகிற 8-ந்தேதிக்குள் அப்பகுதியில் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் யாரும் வசிக்காத 2 குடிசைகளை அதிகாரிகள் இடித்து அகற்றினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story