கொரோனா விதிகளை கடைப்பிடிக்காத தங்கும் விடுதிக்கு சீல்


கொரோனா விதிகளை கடைப்பிடிக்காத தங்கும் விடுதிக்கு சீல்
x
தினத்தந்தி 29 Nov 2021 9:50 PM IST (Updated: 29 Nov 2021 9:50 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காத தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் எச்சரிக்கை விடுத்தார்.

வேலூர்

கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காத தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் எச்சரிக்கை விடுத்தார்.

கலெக்டர் ஆய்வு

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக வேலூர் மாநகராட்சி பகுதியில் தங்கும் விடுதியில் தங்கியுள்ள வெளிமாநிலத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

 சுக்கையா வாத்தியார் தெருவில் உள்ள 2 விடுதிகளில் தங்கியிருந்த 7 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது. 

வேலூருக்கு சிகிச்சைக்காக வரும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வருவதால் மாநகராட்சி நிர்வாகம் தொற்று தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் இன்று காலை வேலூர் காந்திரோடு, சுக்கையா வாத்தியார் தெரு பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். 

விடுதியில் தங்கி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதா?, விடுதி ஊழியர்கள் உள்பட அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்களா என்ற விவரங்களை கேட்டறிந்தார்.

தங்கும் விடுதிக்கு சீல்

ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் கூறுகையில், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வெளிமாநிலங்கள், பிறமாவட்டங்களில் இருந்து ஏராளமான நோயாளிகள் வருகிறார்கள். 

அவர்கள் தங்கும் விடுதிகளில் தங்கினால் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் வர வேண்டும். சான்று இல்லாதவர்களுக்கு விடுதியில் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். 

பரிசோதனை முடிவு வந்தபின்னர் தான் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். விடுதியில் கொரோனா கண்டறியப்பட்டால் அங்கு தங்கியுள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 

அவ்வாறு செய்ய தவறினால் விடுதி உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து ஒரே விடுதியில் தொற்று கண்டறியப்பட்டாலோ, கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டாலோ அந்த விடுதி தற்காலிகமாக மூடி ‘சீல்' வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அந்த பகுதியில் பழுதான நிலையில் காணப்பட்ட கட்டிடத்தை பார்வையிட்ட கலெக்டர், மிகவும் மோசமாக காணப்படும் கட்டிடத்தின் ஒரு பகுதியை இடிக்க உத்தரவிட்டார். 

ஆய்வின்போது வேலூர் மாநகர நல அலுவலர் மணிவண்ணன், உதவி கமிஷனர் மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story