அரசு நர்சு கையில் சிக்கிய தலைமுடி


அரசு நர்சு கையில் சிக்கிய தலைமுடி
x
தினத்தந்தி 29 Nov 2021 9:59 PM IST (Updated: 29 Nov 2021 9:59 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டியில் அடித்து கொல்லப்பட்ட அரசு நர்சு கையில் தலைமுடிகள் இருந்தன. இதனை டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, கொலையாளியை பிடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

ஆண்டிப்பட்டி:

 அரசு நர்சு அடித்துகொலை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றியவர் செல்வி (வயது 46). இவர், ஆண்டிப்பட்டி பாப்பம்மாள்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். 

கடந்த 24-ந்தேதி இவர், வீட்டுக்குள்ளேயே அடித்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

செல்விக்கு நன்றாக தெரிந்த நபர் தான், அவரை கொலை செய்திருக்கலாம் என்பதை போலீசாா் உடனடியாக உறுதி செய்து விட்டனர். ஆனால் அந்த நபர் யார்? என்பது குறித்த கிடுக்கிப்பிடி விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

 7 பேரை பிடித்து விசாரணை

செல்வியின் செல்போனை கொலையாளி எடுத்து சென்று விட்டான். அந்த செல்போன் தற்போது வரை ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே கொலை செய்யப்பட்ட செல்வியின் செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசிய நபர்கள் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்தனர்.

இதில் 7 பேர், அவரிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். 

இருப்பினும் இந்த வழக்கில் துப்புத்துலங்காமல், கடந்த ஒரு வாரகாலமாக கிணற்றில் போட்ட கல்லாக மர்மம் நீடித்து வருவது போலீசாரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தியபோதிலும், கொலையாளி பற்றிய முடிவு எட்டப்படவில்லை.

போலீசாருக்கு சவால்

போலீசாருக்கு கடும் சவாலாக உள்ள இந்த வழக்கு விசாரணை குறித்த விவரங்களை அறிய, போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே நேற்று ஆண்டிப்பட்டிக்கு வந்தார். 

விசாரணையில் திருப்தி இல்லாததாலும், போதுமான ஆதாரங்கள் கிடைக்காததாலும் அதிருப்தி அடைந்த அவர் மீண்டும் ஆரம்பத்தில் இருந்தே விசாரணை நடத்த தனிப்படையினருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

கொலை செய்யப்படுவதற்கு முன்பு செல்வி, கொலையாளியுடன் போராடி இருப்பது வீட்டில் சிதறி கிடந்த பொருட்கள் மூலம் தெரியவந்தது. 

 கையில் சிக்கிய தலைமுடிகள்

இதற்கிடையே நர்சு செல்வியின் உடலை பரிசோதனை செய்த போது, ஒரு கையில் உள்ள விரல்கள் மூடப்பட்டு இருந்தன. அதனை பிரித்து பார்த்தபோது, அதற்குள் சில தலை முடிகள் இருந்தன. அவை, ஆணின் தலைமுடி ஆகும். அது கொலையாளி தலையில் உள்ளதாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

அதாவது கொலையாளி தன்னை தாக்கியபோது, அவனது தலையை பிடித்து செல்வி இழுத்து இருக்கிறார். அப்போது தான், தலைமுடி அவரது கையில் சிக்கி இருக்கிறது என்று போலீசார் நம்புகின்றனர். 

டி.என்.ஏ. பரிசோதனை

நர்சு கொலை வழக்கை பொறுத்தவரையில், மர்மத்தை உடைத்து துப்புத்துலக்க தலைமுடிகள் துருப்புச்சீட்டாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு போலீசார் மத்தியில் எழுந்துள்ளது. 

இதனையடுத்து அந்த தலைமுடிகள் யாருடையது என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக தலைமுடிகளை, டி.என்.ஏ. பரிசோதனைக்காக சென்னைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
 
அந்த பரிசோதனையின் முடிவு வந்தவுடன், கொலையாளியை எளிதாக அடையாளம் கண்டுபிடித்து கைது செய்து விடலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story