விடிய, விடிய வெளுத்து வாங்கிய கன மழை


விடிய, விடிய வெளுத்து வாங்கிய கன மழை
x
தினத்தந்தி 29 Nov 2021 10:16 PM IST (Updated: 29 Nov 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் பகுதியில் விடிய, விடிய கன மழை வெளுத்து வாங்கியது. மீனவர்கள் 6-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் விடிய, விடிய கன மழை வெளுத்து வாங்கியது. மீனவர்கள் 6-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. 
வெளுத்து வாங்கிய மழை
நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு, விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கோடியக்கரை, கரியாப்பட்டினம், செம்போடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு பெய்ய தொடங்கிய கனமழை விடிய, விடிய வெளுத்து வாங்கியது.  இந்த மழையால் மழை வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. ஒரு சில  வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதை வெளியேற்ற பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
நெற்பயிர்கள் மூழ்கின
வேதாரண்யம் பகுதியில்  5 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் மீண்டும் நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தேத்தாகுடி தெற்கு பகுதியில் உள்ள ெரயில்வே சுரங்கப்பாதையில் 5 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் தேத்தாகுடி தெற்கு பகுதியில் உள்ள காந்திநகரில் வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கியது. தேங்கிய மழை நீரை ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் மோட்டார் வைத்து தண்ணீரை இறைத்து வெளியேற்றி வருகின்றனர். 
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
தொடர் மழை மற்றும் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்ததாலும் ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் பகுதி மீனவர்கள் 6-வது நாளாக  மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் 1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மீன்பிடிக்க செல்லாததால் வலைகளை பழுது பார்க்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர்.
1,156 வீடுகள் சேதம்
   நாகை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்மழையால் 1,156 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
நாகை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
திருப்பூண்டி 93, திருக்குவளை 84, நாகை 81, வேதாரண்யம் 81,  தலைஞாயிறு 74,கோடியக்கரை 32

Next Story