‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள்
நத்தம் தாலுகா வேலம்பட்டி ஊராட்சி காமராஜ்நகர் தோட்டியாகுளம் அருகே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையோரத்தில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதுடன் அப்பகுதியில் குப்பை தொட்டி வைக்கவும் அதிகாரிகள் முன்வரவேண்டும்.
-மதி, காமராஜ்நகர்.
அடிப்படை வசதிகள் செய்யப்படுமா?
நத்தம் தாலுகா லிங்கவாடி பகுதியில் சாலை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படவில்லை. இங்குள்ள சாலைகளும் தார்சாலைகளாக இல்லாமல் மண் பாதையாக இருப்பதுடன் பாதையின் இருபுறமும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டிய நிலையில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வயதானவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுந்தரம், லிங்கவாடி.
ஆக்கிரமிப்பின் பிடியில் ஓடை
குஜிலியம்பாறை தாலுகா காந்திநகர் பகுதியில் உள்ள ஓடையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மழைக்காலத்தில் ஓடைக்கு வரும் தண்ணீர் தொடர்ந்து செல்ல வழியில்லாமல் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துவிடுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே ஓடையை ஆக்கிரமித்தவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்துக்குமார், காந்திநகர்.
ஆபத்தான நிலையில் மின்கம்பம்
பழனியை அடுத்த கலிக்கநாயக்கன்பட்டி தெற்கு தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிவதுடன் மின்கம்பம் எந்த நேரத்திலும் முறிந்து விழும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், கலிக்கநாயக்கன்பட்டி.
சாலையில் தேங்கும் மழைநீர்
வேடசந்தூர் தாலுகா சித்தூர் ஊராட்சி நல்லமநாயக்கன்பட்டி கிழக்கு தெருவில் மழைநீர் வெளியேற வடிகால் அமைக்கப்படவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக தண்ணீர் வெளியேறாமல் சாலையிலேயே தேங்கி நிற்கிறது. அதில் கொசுப்புழுக்கள் உருவாவதால் இரவில் கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இளங்கோ, நல்லமநாயக்கன்பட்டி.
Related Tags :
Next Story