‘குடியுரிமையை ரத்து செய்து கருணைக்கொலை செய்யுங்கள்’
போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றும் வேலை கிடைக்காததால், குடியுரிமையை ரத்து செய்து விட்டு கருணைக் கொலை செய்யுமாறு தேனி கலெக்டரிடம் திருநங்கை கண்ணீர் மல்க மனு கொடுத்தார்.
தேனி:
திருநங்கை மனு
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி மனுக்கள் வாங்கினார்.
கலெக்டரிடம், தேனி பாரஸ்ட்ரோடு 6-வது தெருவை சேர்ந்த திருநங்கை ஆராதனா (வயது 28) கண்ணீர் மல்க ஒரு மனு கொடுத்தார். இவர். தேனி ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். அவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த 2018-ம் ஆண்டு கோர்ட்டு உத்தரவு பெற்று, 2-ம்நிலை காவலர் தேர்வு எழுதினேன். அதில் தேர்ச்சி பெற்றேன். அடுத்தக்கட்ட தேர்வுகளுக்கு எனக்கு அழைப்பு எதுவும் வரவில்லை. இதனால் மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.
கோர்ட்டு உத்தரவுப்படி, எனக்கு 2018-ம் ஆண்டு போலீஸ் தேர்வில் ஒரு பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரை அந்த பணி கிடைக்கவில்லை.
கருணைக்கொலை
தேர்வில் தேர்ச்சி பெற்றும் எனக்கான அங்கீகாரம் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். முன்னாள் முதல்-அமைச்சர்கள் முதல் தற்போதைய முதல்-அமைச்சர் வரை 4 ஆண்டுகளாக மனு அளித்தும், உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் என் மீது கருணை காட்டவில்லை.
எனவே போலீஸ் ஆக வேண்டும் என்ற கனவை நிறைவேற்றித் தர வேண்டும். இல்லையெனில், எனது குடியுரிமையை ரத்து செய்து என்னை கருணைக்கொலை செய்து விடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story