கடலுக்கு திருப்பி விடப்பட்ட வைகை வெள்ளத்தில் சிக்கிய 150 ஆடுகள்


கடலுக்கு திருப்பி விடப்பட்ட வைகை வெள்ளத்தில் சிக்கிய 150 ஆடுகள்
x
தினத்தந்தி 29 Nov 2021 11:03 PM IST (Updated: 29 Nov 2021 11:03 PM IST)
t-max-icont-min-icon

கடலுக்கு திருப்பி விடப்பட்டுள்ளவைகை வெள்ளத்தில் சிக்கிய 150 ஆடுகளை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

ராமநாதபுரம், 
கடலுக்கு திருப்பி விடப்பட்டுள்ளவைகை வெள்ளத்தில் சிக்கிய 150 ஆடுகளை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
வெள்ளத்தில் சிக்கிய ஆடுகள்
வைகை அணையில் இருந்து உபரிநீர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு திறந்து விடப்பட்டு உள்ளது. இருந்தாலும் பெரிய கண்மாய் மற்றும் பாசன கால்வாய்களுக்கு செல்வது போக மீதம் உள்ள சுமார் 4 ஆயிரத்து 500 கனஅடி நீர் கடலுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் ராமநாதபுரம் அருகே புல்லங்குடி வழியாக 60 அடி அகல கால்வாயில் அதிவேகமாக செல்கிறது. முன்னதாக புல்லங்குடி பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் உள்ளிட்டவர்கள் புல்லங்குடி கால்வாயை அடுத்துள்ள மேட்டுப்பகுதியில் ஆட்டு கிடை போட்டு சுமார் 150 ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.  நேற்று முன்தினம் இரவு ஆடுகளை கிடையில் அடைத்துள்ளனர். நள்ளிரவில் கடலுக்கு திறந்துவிடப்பட்ட தண்ணீர் அதிகரித்துள்ளதால் இந்த பகுதியில் தண்ணீர் வேகமாக வந்து ஆட்டுகிடை அமைந்துள்ள மேட்டுப்பகுதியை சூழ்ந்தது.
படகில் சென்று மீட்டனர்
இதனால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த பகுதி நீரால் சூழப்பட்டு ஆபத்தான நிலை ஏற்பட்டது. தண்ணீர் அதிகரித்ததால் அதன் ஆபத்தை உணர்ந்த ஆட்டுகிடை போட்டிருந்தவர்கள் உடனடியாக ராமநாதபுரம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் 12 தீயணைப்பு படைவீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். 
நேற்று காலை முதல் பிளாஸ்டிக் படகில் அங்கு கடந்து சென்று ஆடுகளையும், ஆட்டுக்கிடை போட்டிருந்தவர்களையும் பத்திரமாக மீட்டனர். சுமார் 10 தடவை கால்வாயை படகில் கடந்து சென்று 150 ஆடுகளையும் மீட்டனர். துரிதமாக செயல்பட்டு ஆடுகளை பத்திரமாக மீட்டு கொண்டு வந்த தீயணைப்புத்துறையினருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர். 

Next Story