வேடிக்கை பார்த்த மாணவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்
வேடிக்கை பார்த்த மாணவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்
நெமிலி
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்த நெடும்புலி புதுப்பேட்டை குயவர் தெருவை சேர்ந்த திருநாவுக்கரசு மகன் சரவணன் (வயது 16). 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று நெடும்புலி தரைப்பாலம் அருகே உள்ள கால்வாயில் மழைநீர் ஆர்ப்பரித்து செல்வதை வேடிக்கை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அங்கு தனது இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு தரைபாலத்தை கடந்து செல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது.
தரைப்பாலத்தில் சுமார் 4 அடி உயரத்திற்கு தண்ணீர் சென்றதால் தடுமாற்றம் அடைந்த சரவணன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.
அருகில் இருந்தவர்கள் மீட்க முயற்சித்தும் முடியாமல் போனதால் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டும் சரவணனை கண்டுபிடிக்க முடியவில்லை.
அதைத்தொடர்ந்து அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 20 பேர் கொண்ட மீட்பு குழுவினர் படகு மூலம் கால்வாய், அதனை சுற்றியுள்ள பகுதிகளான ரெட்டிவலம் பாலம் மற்றும் கொசஸ்தலை ஆறு ஆகிய இடங்களில் தேடி வருகின்றனர்.
தகவல் அறிந்ததும் அமைச்சர் காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியை பார்வையிட்டனர்.
பின்னர் மாணவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி விரைவில் தேடி கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
Related Tags :
Next Story