வேலூரில் கொட்டும் மழையில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்


வேலூரில் கொட்டும் மழையில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Nov 2021 11:24 PM IST (Updated: 29 Nov 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

கொட்டும் மழையில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

வேலூர்

வேலூர் மாவட்ட பா.ஜ.க. வணிகப்பிரிவு மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு சார்பில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மறுக்கும் தி.மு.க. அரசை கண்டித்து வேலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து இருந்தனர். இதையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டனர்.
 இரும்பு தடுப்புகள் (பேரிகார்டு) கொண்டு கலெக்டர் அலுவலகம் செல்லும் வழியில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் 11.30 மணியளவில் பா.ஜ.க.வினர் கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அதைத்தொடர்ந்து பா.ஜ.க.வினர் கலெக்டர் அலுவலகம் அருகே கொட்டும் மழையில் குடை பிடித்தப்படி ஆர்ப்பாட்டம் செய்தனர். வணிகப்பிரிவு, எஸ்.சி. எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர்கள் சக்கரவர்த்தி, தீபக் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரியும், விலையை குறைக்காததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில், மாவட்ட தலைவர் தசரதன், வணிகப்பிரிவு மாநில துணைத்தலைவர் திருநாவுக்கரசு, வணிகப்பிரிவு மாநில செயலாளர் கலைமகள் இளங்கோ, ஓ.பி.சி. அணி மாவட்ட செயலாளர் எஸ்.கே.மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story