பரமத்தி அருகே பரபரப்பு: மொபட்டில் சென்ற பெண் போலீஸ் ஏட்டுவிடம் 3 பவுன் நகைபறிப்பு மோட்டார்சைக்கிளில் சென்ற மர்மநபர்களுக்கு வலைவீச்சு
பரமத்தி அருகே பரபரப்பு: மொபட்டில் சென்ற பெண் போலீஸ் ஏட்டுவிடம் 3 பவுன் நகைபறிப்பு மோட்டார்சைக்கிளில் சென்ற மர்மநபர்களுக்கு வலைவீச்சு
பரமத்திவேலூர்:
பரமத்தி அருகே மொபட்டில் சென்ற பெண் போலீஸ் ஏட்டுவிடம் மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 3 பவுன் நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெண் போலீஸ் ஏட்டு
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சண்முகாநகரை சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மனைவி மணிமேகலை (வயது 42). இவர் நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள குடிமைப்பொருள் கண்காணிப்பு அலுவலகத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக தனது மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது பரமத்தி அருகே மோட்டார்சைக்கிளில் மர்மநபர்கள் மணிமேகலை சென்ற மொபட்டை பின்தொடர்ந்து வந்துள்ளனர். இதையடுத்து பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வந்ததும் மணிமேகலை கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் நகையை பறிக்க முயன்றனர்
வலைவீச்சு
ஆனால் மணிமேகலை நகையை கெட்டியாக பிடித்து கொண்டதால் கழுத்தில் இருந்த பாதி நகையான 3 பவுன் நகையை மட்டும் மர்ம நபர்கள் பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில் நிலை தடுமாறி கீழே விழந்த பெண் ஏட்டு மணிமேகலையை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் போலீஸ் ஏட்டுவிடம் நகை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இரவு நேரத்தில் தனியாக மொபட்டில் சென்ற பெண் போலீஸ் ஏட்டுவிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரமத்தி பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Related Tags :
Next Story