நட்சத்திர கல் தருவதாக கூறி ஓட்டல் உரிமையாளரிடம் ரூ3½ லட்சம் அபேஸ் பெங்களூருவை சேர்ந்த 2 பேர் கைது


நட்சத்திர கல் தருவதாக கூறி ஓட்டல் உரிமையாளரிடம் ரூ3½ லட்சம் அபேஸ் பெங்களூருவை சேர்ந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 30 Nov 2021 12:53 AM IST (Updated: 30 Nov 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

நட்சத்திர கல் தருவதாக கூறி தஞ்சாவூர் ஓட்டல் உரிமையாளரிடம் ரூ3½ லட்சம் அபேஸ் செய்த பெங்களூருவை சேர்ந்த 2 பேரை கிருஷ்ணகிரியில் போலீசார் கைது செய்தனர். பணத்துடன் தப்பிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி:
நட்சத்திர கல் தருவதாக கூறி தஞ்சாவூர் ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.3½ லட்சம் அபேஸ் செய்த பெங்களூருவை சேர்ந்த 2 பேரை கிருஷ்ணகிரியில் போலீசார் கைது செய்தனர். பணத்துடன் தப்பிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓட்டல் உரிமையாளர் 
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுகா வெள்ளம்பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் மருது பாண்டியன் (வயது 43). ஓட்டல் உரிமையாளர். இவரை திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள கரியமங்கலம் கிராமத்தைசேர்ந்த முத்து (39) என்பவர் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது தன்னிடம் அதிக மதிப்புள்ள சுலைமான் கல் (நட்சத்திர கல்) உள்ளது. இந்த கல்லை வாங்கி வைத்து கொண்டால் நிறைய பணம் சேரும் என ஆசை வார்த்தை கூறினார். அதற்காக ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் தர வேண்டும் என முத்து கூறினார். இதையடுத்து அந்த கல்லை வாங்கி கொள்வதாக மருது பாண்டியனும் சம்மதம் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரிக்கு வந்தனர் 
அதன்படி கடந்த 27-ந் தேதி மருதுபாண்டியனும், முத்துவும் கிருஷ்ணகிரிக்கு வந்தனர். கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அவர்கள் அறை எடுத்து தங்கினர். அப்போது முத்துவின் நண்பரான திருப்பத்தூர் மாவட்டம் மேட்டு காலனியை சேர்ந்த செந்தில் (33) என்பவர் அங்கு வந்தார்.
இதைத் தொடர்ந்து பெங்களூரு பி.தாசிரிப்பள்ளியை சேர்ந்த ராஜேஷ், சந்திரசேகர் ஆகியோரிடம் தான் நட்சத்திர கல் உள்ளது. அவர்கள் வேப்பனப்பள்ளி சாலையில் வருவார்கள். எனவே நாம் அங்கு செல்லலாம் என முத்து கூறினார். இதை நம்பி மருதுபாண்டியனும் காரில் சென்றார். அந்த காரில் மருதுபாண்டியன், முத்து, செந்தில் ஆகிய 3 பேரும் இருந்தனர். 
பணத்துடன் ஓட்டம் 
இந்த நிலையில் குருபரப்பள்ளி-வேப்பனப்பள்ளி சாலையில் நடுப்பட்டி ஜங்ஷன் அருகில் ராஜேசும், சந்திரசேகரும் காாில் வந்தனர். அவர்கள் காரில் இருந்தபடி மருதுபாண்டியனிடம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை வாங்கினார்கள். ஆனால்  பேசியபடி அவர்கள் கல் எதையும் கொடுக்கவில்லை.
மேலும் பணத்தை மட்டும் வாங்கி கொண்டு காரில், ராஜேசும், சந்திரசேகரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மருதுபாண்டியன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தார். அவருடன் முத்துவும், செந்திலும் உடன் சென்றனர். நாங்களும் ஏமாற்றப்பட்டோம் என அவர்களும் போலீசில் தெரிவித்தனர்.
2 பேர் கைது 
இதையடுத்து தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து மருதுபாண்டியனிடம் பணம் மோசடி செய்ய உடந்தையாக இருந்த முத்து, செந்தில் ஆகிய 2 பேரையும் மோசடி வழக்கின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பணத்துடன் தப்பிய ராஜேஷ், சந்திரசேகர் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் முத்து, செந்தில் ஆகியோர் பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story