கடலூர் அரசு ஆஸ்பத்திரி வருபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்


கடலூர் அரசு ஆஸ்பத்திரி வருபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்
x
தினத்தந்தி 30 Nov 2021 1:11 AM IST (Updated: 30 Nov 2021 1:11 AM IST)
t-max-icont-min-icon

‘ஒமிக்ரான்’ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடலூர் அரசு ஆஸ்பத்திரி வருபவர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தனர்.

கடலூர், 

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரேனாா வைரசான ‘ஒமிக்ரான்’ தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு பயந்து பல நாடுகள் தங்களது எல்லைகளை மூடி உள்ளன. விமான சேவைகளையும் ரத்து செய்து வருகிறது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்து அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கண்காணிப்பு

இதன்படி கடலூர் மாவட்டத்திற்கும் வெளிநாடுகளில் இருந்து வருவோரை கண்காணிக்க சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வருவோரை கண்காணிக்க அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.
இது பற்றி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மீராவிடம் கேட்ட போது, ஒமிக்ரான் வைரஸ் எச்சரிக்கையாக வெளிநாடுகளில் இருந்து வருவோரை கண்காணிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இருப்பினும் 100 சதவீதம் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும். முக கவசம் அணிய வேண்டும். அது தான் இதை தடுக்க நிரந்தர தீர்வாக இருக்கும் என்றார்.

தடுப்பூசி கட்டாயம்

இதற்கிடையில் இந்த வைரஸ் எச்சரிக்கையாக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வருவோர் கட்டாயம் தடுப்பூசி போடவேண்டும் என்று கண்காணிப்பாளர் டாக்டர் சாய்லீலா கூறினார். இது பற்றி அவர் மேலும் கூறுகையில், ஒமிக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும், குறிப்பாக நோயாளிகளை கவனிப்பதற்காக உடன் இருப்பவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும்.தடுப்பூசி போடாமல் வருவோருக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வர தடை விதிக்கப்படுகிறது. அதேபோல் ஆஸ்பத்திரிக்குள் வரும் அனைவரும் முக கவசம் அவசியம் அணிய வேண்டும். இல்லையென்றால் அனுமதி கிடையாது. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றார்.

Next Story