வரத்து வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
வரத்து வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடையார்பாளையம்:
சாலை மறியல்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே துளாரங்குறிச்சி கிராமத்தில் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் தற்போது பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் அப்பகுதியில் அதிக மழை பெய்யும்போது வீடுகளுக்குள் மழைநீர் புகும் அபாய சூழல் ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அதிக மழைப் பொழிவின்போது நீர் நிரம்பி வீடுகளுக்குள் மழைநீர் புகும் அபாயம் உள்ளது. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், மனு அளித்தும், நீர்வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமலும், மழைநீர் வடிகால்களை தூர்வாராமலும் அலட்சியமாக உள்ளனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை, என்று தெரிவித்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலரழகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாநிதி மற்றும் வருவாய் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்ததன்பேரில், பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story