பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, மரவநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் ஆனந்த் (வயது 23). கண்ணன் குடும்பத்தினர் சென்னை வேளச்சேரி திரவுபதி மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் சொந்த ஊருக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே சென்னையில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்த ஆனந்தும், வேளச்சேரி திரவுபதி மாரியம்மன் கோவில் 4-வது வார்டை சேர்ந்த வெங்கடேசனின் மகளும், பட்டதாரியுமான ரம்யாவும் (20) காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் கடந்த 25-ந்தேதி வேப்பந்தட்டை தாலுகா எறையூர் சர்க்கரை ஆலை முத்து மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் திருமணத்திற்கு ரம்யா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் ஆனந்தும், ரம்யாவும் பாதுகாப்பு கேட்டு நேற்று பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். அவர்கள் மேஜர் என்பதால் போலீசார் ரம்யாவின் விருப்பப்படி, ஆனந்துடன் அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story