மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தம்


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தம்
x
தினத்தந்தி 30 Nov 2021 1:51 AM IST (Updated: 30 Nov 2021 1:51 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு உள்ளது.

மேட்டூர்
மேட்டூர் அணை 
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை தீவிரம் அடைந்தது. இதன் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இதன் எதிரொலியாக கடந்த 13-ந் தேதி நள்ளிரவு மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டி நிரம்பியது. 
இதையடுத்து அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 13-ந் தேதி நள்ளிரவு முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. முன்னதாக வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடி வீதம் திறந்து விடப்பட்ட தண்ணீர் அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
அதிகபட்சமாக 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது. கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. 
16 கண் மதகுகள்
நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்தது. இதையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக திறப்பது நேற்று முன்தினம் இரவு நிறுத்தப்பட்டது. 
அதே நேரத்தில் அணையையொட்டி அமைந்துள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதமும், கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. 15 நாட்களுக்கு பிறகு 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
120 அடி
இதனிடையே நேற்று அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரத்து 500 கனஅடியாக நேற்று மதியம் குறைந்தது. இதையடுத்து அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி வீதமும், கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. 


Next Story