மதுரைக்கு வரும் வெளிநாட்டினர் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்
விமான நிலையத்தில் அனைவருக்கும் கட்டாய காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஒமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வெளிநாட்டு பயணிகள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அனிஷ்சேகர் அறிவித்துள்ளார்.
மதுரை,
விமான நிலையத்தில் அனைவருக்கும் கட்டாய காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஒமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வெளிநாட்டு பயணிகள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அனிஷ்சேகர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒமிக்ரான் வைரஸ்
இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா பரவல் குறைந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரசின் மாறுபட்ட வகைத்தொற்று ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையினை தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. இங்கிலாந்தில் ஆல்பா எனும் உருமாற்றம், பின்னர் தென் ஆப்பிரிக்காவில் பீட்டா என்ற உருமாற்றம், பிரேசிலில் காமா, இந்தியாவில் டெல்டா போன்ற உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டன. தற்போது இந்த புதுவகையான உருமாற்றத்திற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த மரபணு வரிசையில் பி.1.1.529 புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை அறியப்பட்டுள்ள உருமாற்றங்களில் வைரசில் அதிகபட்சம் இரண்டு வகை அமினோ ஆசிட்களில் மட்டுமே மரபணு மாற்றங்கள் காணப்பட்டன. ஒமிக்ரான் வைரசில் 50-க்கும் மேற்பட்ட அமினோ ஆசிட்களில் மரபணு மாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
காய்ச்சல் பரிசோதனை
இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் மதுரை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஒமிக்ரான் தொற்று காணப்படும் நாடுகளான ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்கா, பிரேசில், ஹாங்காங், சீனா, நியூசிலாந்து, இஸ்ரேல், சிங்கப்பூர், மொரீசியஸ், ஜிம்பாப்வே, வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்து வரும் அனைத்துப் பயணிகளும் 2 தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களாக இருந்தாலும், பி.சி.ஆர். பரிசோதனை வந்த முதல் நாள் மற்றும் 8-வது நாளன்று மேற்கொள்ளப்படும். மேலும் அவர்கள் 14 நாட்கள் வீட்டில் தங்களை கட்டாயம் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். அவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நாடுகள் தவிர பிற நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கண்டிப்பாக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அனைத்துப் பயணிகளுக்கும் (உள்நாடு மற்றும் வெளிநாடு) காய்ச்சல் பரிசோதனை செய்யப்படும். மேலும், விமான முனையத்தில் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனை செய்து, தனிமைப்படுத்தப்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story