மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில் கோர்ட்டில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்
மைசூருவில் நடந்த மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில் போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். பின்னர் இவ்வழக்கை மைசூரு மாவட்ட செசன்சு கோர்ட்டுக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.
மைசூரு: மைசூருவில் நடந்த மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில் போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். பின்னர் இவ்வழக்கை மைசூரு மாவட்ட செசன்சு கோர்ட்டுக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.
மருத்துவ மாணவி கற்பழிப்பு
மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி மருத்துவ மாணவி ஒருவர் தனது நண்பனுடன் காரில் இருந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 7 பேர் கும்பல் அந்த வாலிபரை சரமாரியாக தாக்கிவிட்டு, மருத்துவ மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவம் கர்நாடகம் மட்டுமல்லாது, மாநிலத்தையே உலுக்கியது.
இவ்வழக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் டிரைவர்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் ஆவர். அவர்கள் திருப்பூர் மாவட்டம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவர் குற்றமற்றவர்
இவர்களை மைசூரு தேவராஜா போலீசார் கைது செய்திருந்தனர். மேலும் அவர்கள் மீது மைசூரு முதன்மை குற்றவியல் விரைவு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் 1,499 பக்க குற்றப்பத்திரிகையை நேற்று போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அதில் கைதானவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 376-பி(கூட்டு பாலியல் பலாத்காரம்), கொலை மிரட்டல் உள்பட 6 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் போலீசார் குறிப்பிட்டு உள்ளனர்.
மேலும் கைதான 7 பேரில் ஒருவர் குற்றமற்றவர் என்பது தெரியவந்ததால் அவரை விடுவித்து இருப்பதாகவும் போலீசார் குற்றப்பத்திரிகையில் கூறியிருந்தனர்.
வழக்கு செசன்சு கோர்ட்டுக்கு மாற்றம்
இதையடுத்து இவ்வழக்கை மாவட்ட செசன்சு கோர்ட்டுக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கு தொடர்பாக இனிவரும் விசாரணை செசன்சு கோர்ட்டிலேயே நடைபெறும் என்றும் அவர் கூறினார். இதையடுத்து இவ்வழக்கு தொடர்பான விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
Related Tags :
Next Story