சோதனையில் சிக்கிய ஓய்வுபெற்ற அரசு அதிகாரி கைது


சோதனையில் சிக்கிய ஓய்வுபெற்ற அரசு அதிகாரி கைது
x
தினத்தந்தி 30 Nov 2021 3:23 AM IST (Updated: 30 Nov 2021 3:23 AM IST)
t-max-icont-min-icon

ஊழல் தடுப்பு படை போலீஸ் சோதனையில் சிக்கிய ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்கு ஒத்துழைக்காததால் போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

பெங்களூரு:ஊழல் தடுப்பு படை போலீஸ் சோதனையில் சிக்கிய ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்கு ஒத்துழைக்காததால் போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

15 அதிகாரிகள் சிக்கினர்

பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்த அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படை போலீசார் கடந்த 24-ந் தேதி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது 15 அரசு அதிகாரிகளும் தங்களது வருமானத்தை விட பல மடங்குக்கு சொத்து குவித்திருந்ததை ஊழல் தடுப்பு படை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

கதக் மாவட்டத்தில் வேளாண் துறை இணை இயக்குனரான ருத்ரேசப்பா மற்றும் கலபுரகி மாவட்டம் ஜேவர்கியில் பொதுப்பணித்துறை என்ஜினீயராக இருந்த சாந்தனகவுடா ஆகிய 2 பேரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால், அவர்களை போலீசார் கைது செய்திருந்தனர்.

ஓய்வுபெற்ற அதிகாரி கைது

இந்த நிலையில், பெங்களூரு புறநகரில் திட்டமிடுதல் துறையின் இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்ற வாசுதேவ் வருமானத்தை விட 1,408 சதவீதம் அளவுக்கு சொத்து குவித்திருந்ததை ஊழல் தடுப்பு படை போலீசார் கண்டுபிடித்திருந்தனர். அவருக்கு சொந்தமாக 28 வீடுகள், 16 வீட்டுமனைகள், நெலமங்களா அருகே 4 ஏக்கர் நிலம், தொட்டபள்ளாப்புரா அருகே கரேஹள்ளி கிராமத்தில் 11 ஏக்கர் நிலம் இருப்பதும் தெரியவந்தது. 

அவருக்கு ஒட்டு மொத்தமாக ரூ.30 கோடியே 65 லட்சத்திற்கு சொத்து இருப்பதும் தெரியவந்தது. அவர் சட்டவிரோதமாக சொத்து சேர்த்தது குறித்து போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காததுடன், போலீசார் கேட்ட ஆவணங்களையும் வழங்காமல் இருந்து வந்தார். இதையடுத்து, அதிகாரி வாசுதேவை ஊழல் தடுப்பு படை போலீசார் கைது செய்துள்ளனர்.

 விசாரணைக்கு பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இதுவரை 3 அதிகாரிகள் கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story