தவறான சிகிச்சையால் இறந்ததாக கூறி வாலிபரின் உடலை வாங்க மறுப்பு செவிலியர் கைது


தவறான சிகிச்சையால் இறந்ததாக கூறி வாலிபரின் உடலை வாங்க மறுப்பு செவிலியர் கைது
x
தினத்தந்தி 30 Nov 2021 4:03 AM IST (Updated: 30 Nov 2021 4:03 AM IST)
t-max-icont-min-icon

செவிலியர் கைது

நெல்லை:
நெல்லை அருகே நாங்குநேரியை அடுத்த கோவைகுளம் மேலத்தெருவை சேர்ந்தவர் பேச்சி. இவருடைய மகன் மாரி (வயது 25). கடந்த 2-தேதி காய்ச்சலுக்கு ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார். இந்த சிகிச்சையால் மாரிக்கு உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. உடனடியாக அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். மீண்டும் அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட தனியார் ஆஸ்பத்திரிக்கு சீல் வைக்கப்பட்டது.
உயிரிழந்தவரின் உடல் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து ஒப்படைக்க போலீசார் முயற்சி செய்தனர். ஆனால் குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து விட்டனர்.
இந்த நிலையில் பேச்சி மற்றும் அவருடைய குடும்பத்தினர், பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பவானி வேல்முருகன் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
தவறான சிகிச்சை அளித்ததால் மாரி இறந்துவிட்டார். அவருக்காக ரூ.10 லட்சம் வரை செலவு செய்தும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும் இது போன்ற தவறுகள் நடக்காத வகையில் மருத்துவத் துறை, சுகாதாரத்துறை மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் மூன்றடைப்பு பகுதியை சேர்ந்த செவிலியர் இசக்கியம்மாளை (29) போலீசார் கைது செய்தனர்.

Next Story