பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு


பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 30 Nov 2021 3:24 PM IST (Updated: 30 Nov 2021 3:24 PM IST)
t-max-icont-min-icon

பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வீதம் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

ஊத்துக்கோட்டை, 

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமானது. பள்ளிப்பட்டு அருகே உள்ள அம்மபள்ளி அணையில் இருந்தும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென்று உயர்ந்து வந்தது. இதனை கருத்தில் கொண்டு கடந்த 21-ந்தேதி முதல் வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்தது.

ஏரிக்கு நீர்வரத்து 4 ஆயிரம் கன அடியாக இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஏரி நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்ததால் ஏரிக்கு நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் இரவு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. நேற்று ஏரிக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது.

அதாவது வினாடிக்கு 26 ஆயிரத்து 200 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஏரியில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. அதிக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கொசஸ்தலை ஆறு பாயும் வழித்தடத்தில் உள்ள கிராம மக்களுக்கு அந்தந்த ஊராட்சிகளின் சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Next Story