தூத்துக்குடியில் வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்
தூத்துக்குடியில் வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்து கிடப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மழைநீரை வெளியேற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
கனமழை
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 25-ந் தேதி கனமழை பெய்தது. தொடர்ந்து நேற்று வரை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக மாவட்டத்தில் பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தூத்துக்குடி நகரில் பல்வேறு இடங்களில் மழைநீர் வீடுகளை சூழ்ந்து தேங்கி கிடக்கிறது. இதனால் இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது. நேற்று காலை முதல் வெயில் அடித்தது. அவ்வப்போது மேக மூட்டம் வந்து மிரட்டினாலும் மழை பெய்யவில்லை. இதனை பயன்படுத்தி வீடுகளை சூழ்ந்து உள்ள மழைநீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
காயல்பட்டினத்தில் மழை அதிகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-
திருச்செந்தூர்-48, காயல்பட்டினம்-90, குலசேகரன்பட்டினம்-21, விளாத்திகுளம்-36, காடல்குடி-30, வைப்பார்-50, சூரங்குடி-26, கோவில்பட்டி-19, கயத்தார்-59, கடம்பூர்-29, ஓட்டப்பிடாரம்-36, மணியாச்சி-6, வேடநத்தம்-18, கீழ அரசடி-18, எட்டயபுரம்-17.5, சாத்தான்குளம்-46.2, ஸ்ரீவைகுண்டம்-31, தூத்துக்குடி-23.2.
பொதுமக்கள் சாலை மறியல்
தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் வீடுகளை சூழ்ந்து கடந்த ஒரு வாரமாக மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் மழைநீரை உடனடியாக அகற்றவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருச்செந்தூர் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் வந்து தண்ணீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் சாலை மறியல் ஒரு மணி நேரத்துக்கு அதிகமாக நீடித்தது. பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்தனர். அதன்பிறகு மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து திருச்செந்தூர் சாலை தோண்டப்பட்டு, தண்ணீரை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
370 மோட்டார்
தூத்துக்குடி மாநகரில் முத்தம்மாள்காலனி, ரகுமத்நகர், ராம்நகர், ஆதிபராசக்தி நகர், தனசேகரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை சுற்றி தொடர்ந்து மழை வெள்ளம் தேங்கி நிற்கிறது. தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழக டெப்போ முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளாகத்திலும், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி வளாகத்திலும் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனை அகற்றுவதற்கான தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி சார்பில், மாநகரம் முழுவதும் 370 மோட்டார்கள் பொருத்தப்பட்டு தேங்கி உள்ள மழைநீரை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து 5 நாட்களாக மழைநீர் தேங்கி இருப்பதாலும், மழைநீருடன் கழிவுநீரும் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
தத்தளிப்பு
தூத்துக்குடி மாநகரத்தை பொறுத்தவரை மழைக்காலங்களில் தண்ணீரில் தத்தளிப்பது வாடிக்கையாகி விட்டது. ஒவ்வொரு ஆண்டும். குடியிருப்புகளை சுற்றி பல நாட்களாக மழைநீர் வடியாமல் தேங்கி நிற்பதும், அதனால் மக்கள் அவதிப்படுவதும் தொடர் கதையாக உள்ளது. இதனால் தூத்துக்குடி மாநகர மக்கள் மழையே வேண்டாம் என நினைக்கும் அளவுக்கு மழையால் பெரும் துன்பங்களை ஆண்டுதோறும் அனுபவித்து வருகின்றனர். தூத்துக்குடி மாநகரில் மழைநீர் எளிதாக வழிந்தோடுவதில் சிரமம் உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு தூத்துக்குடியில் மிக கனமழை பெய்தது. காட்டாற்று வெள்ளமும் கட்டுப்பாடு இன்றி மாநகரை சூழ்ந்தது. தூத்துக்குடி மாநகரமே தண்ணீரில் தத்தளித்தது. இதன் தொடர்ச்சியாக வடகிழக்கு பருவமழை காலங்களில் மக்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
செயல்பாட்டுக்கு வராத திட்டங்கள்
இதற்கான நிரந்தர தீர்வு காணும் வகையில் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாக அவ்வப்போது அறிவிக்கப்பட்டாலும், எந்த திட்டமும் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளும் முடிவடையாததால் மழைநீரை முழுமையாக வெளியேற்றுவதில் அதிகாரிகள் சிரமப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாநகரில் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப்பணிகளும் இன்னும் முடிவடையவில்லை. புதிதாக அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் பணியும் முடிக்கப்படவில்லை. இதனால் தூத்துக்குடி தண்ணீரில் தத்தளித்துக்கொண்டு இருக்கிறது.
Related Tags :
Next Story