ஒமிக்ரான் அச்சுறுத்தல் எதிரொலி-மும்பையில் தொடக்க பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 30 Nov 2021 8:03 PM IST (Updated: 30 Nov 2021 8:03 PM IST)
t-max-icont-min-icon

மும்பையில் இன்று முதல் திறக்க இருந்த தொடக்க பள்ளிகள் ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக வருகிற 15-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

மும்பை, 

 மும்பையில் இன்று முதல் திறக்க இருந்த தொடக்க பள்ளிகள் ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக வருகிற 15-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
 
ஒமிக்ரான் அச்சுறுத்தல்

மராட்டியத்தில் நகர்பகுதிகளில் 8 முதல் 12-ம் வகுப்பு வரையும்,  ஊரகப்பகுதிகளில் 5 முதல் 12-ம் வகுப்பு வரையும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் தற்போது மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தின் தினசரி தொற்று பாதிப்பு 1000-க்கும் குறைவாகவே உள்ளது.

இதையடுத்து தொடக்க பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்தது. மேலும் இன்று(1-ந்தேதி) முதல் நகர்பகுதிகளில் 1 முதல் 7-ம் வகுப்பு வரையிலும், ஊரகப்பகுதிகளில் 1 முதல் 4-ம் வகுப்பு வரையிலும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்தது. இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளும் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. 

இந்தநிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை ஒமிக்ரான் கொரோனா வைரசால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த வகை வைரஸ் வீாியம் மிக்கது என கூறப்படுகிறது. இதனால் ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

பள்ளி திறப்பு தாமதம்

இந்த வகையில் ஒமிக்ரான் அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில் மக்கள் நெருக்கம் மற்றும் உலக நாடுகளுடனான இணைப்பு போன்ற காரணங்களால் மும்பையில் ஆரம்ப பள்ளிகளை திறப்பதை தாமதப்படுத்த மாநகராட்சி முடிவு செய்து உள்ளது. அதன்படி மும்பையில் வருகிற 15-ந் தேதி முதல் 1 முதல் 7-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என மாநகராட்சி அறிவித்து உள்ளது.

 இதுகுறித்து மும்பை மாநகராட்சி கல்வித்துறை அதிகாரி ராஜூ தட்வி கூறுகையில், "ஒமிக்ரான் வகை வைரஸ் புதிய அச்சுறுத்தலாக நம் முன் உள்ளது. பாதுகாப்பு மற்றும் முன்எச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள நமக்கு சிறிது காலம் தேவைப்படுகிறது. எனவே பள்ளிகளை வருகிற 15-ந் தேதி முதல் திறக்க முடிவு செய்து உள்ளோம். 1 முதல் 7-ம் வகுப்பு வரை 2 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். நாங்கள் முககவசம், கிருமி நாசினி போன்றவற்றை அனைத்து பள்ளிகளுக்கும் தயார் செய்ய வேண்டும். பள்ளிகளை திறக்கும் முன் பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் கடிதம் பெற வேண்டும். பெற்றோர் ஒப்புதல் கடிதம் வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. முதல் சில நாட்கள் அவர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விரும்பவில்லை என்றால் குழந்தைகள் ஆன்லைன் வகுப்பு மூலம் படிக்கலாம்" என்றார்.



Next Story