ஊட்டியில் ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளருக்கு 7 ஆண்டு சிறை
ஊட்டியில் ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளருக்கு 7 ஆண்டு சிறை
ஊட்டி
நூலகம் கட்டிய பணத்தை விடுவிக்க ஒப்பந்ததாரரிடம் ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஊட்டி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
ரூ.9 ஆயிரம் லஞ்சம்
நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் உதவி செயற் பொறியாளராக பணிபுரிந்து வந்தவர் ஆறுச்சாமி (வயது 58). கடந்த 2008-ம் ஆண்டு பந்தலூர் அருகே சேரம்பாடியில் மத்திய அரசின் எஸ்.ஜி.ஆர்.ஒய். (சம்பூர்ணா கிராம ரோஜ்கார் யோஜனா) திட்டத்தின் கீழ் புதிதாக நூலக கட்டுமான பணிகள் நடந்தது.
இந்த பணிகள் முடிந்ததற்கான சான்றிதழ் வழங்கவும், தொகையை விடுவிக்கவும் ஆறுச்சாமி ஒப்பந்ததாரர் சந்திரபோசிடம் ரூ.9 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து ஒப்பந்ததாரர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து போலீசார் ரசாயனம் தடவிய ரூ.9,000 பணத்தை ஒப்பந்ததாரரிடம் கொடுத்தனர். இதையடுத்து கடந்த 18.9.2008-ந் தேதி அன்று ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஒப்பந்ததாரர் சந்திரபோஸ் உதவி செயற்பொறியாளர் ஆறுச்சாமியிடம் லஞ்சமாக ரூ.9000 கொடுத்தார்.
இதை உதவி செயற்பொறியாளர் வாங்கிய போது, ரகசிய கண்காணிப்பில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்தனர். பணத்தில் அவரது கை ரேகை பதிவாகி இருந்தது உறுதி செய்யப்பட்டது.
7 ஆண்டு சிறை
இதுகுறித்து வழக்கு விசாரணை ஊட்டி சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கோர்ட்டில் போலீசார் ஆவணங்களை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
இதில், நூலக கட்டுமான பணிக்கு பணத்தை விடுவிக்க ஒப்பந்ததாரரிடம் ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளர் ஆறுச்சாமிக்கு லஞ்ச தடுப்பு உள்பட 2 பிரிவுகளின் கீழ் 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சார்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பளித்தார்.
மேலும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் அவரை கோவை மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.
Related Tags :
Next Story