போக்குவரத்து விதியை மீறி எதிர் திசையில் வந்த வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பினர்


போக்குவரத்து விதியை மீறி எதிர் திசையில் வந்த வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பினர்
x
தினத்தந்தி 30 Nov 2021 9:22 PM IST (Updated: 30 Nov 2021 9:22 PM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து விதியை மீறி எதிர் திசையில் வந்த வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பினர்

திருப்பூர்,
திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி அருகே நடராஜா தியேட்டர் ரோடு ஒரு வழிப்பாதையாக உள்ளது. இங்கு நேற்று போக்குவரத்து விதியை மீறி எதிர் திசையில் வந்த வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.
அடிக்கடி விபத்து
திருப்பூர் கருவம்பாளையத்தில் இருந்து பார்க் ரோடு, நஞ்சப்பா பள்ளி ரோடு, டவுன்ஹால், ரெயில் நிலையம் குமரன் ரோடு ஆகிய ரோடுகளை இணைக்கும் வகையில் நடராஜா தியேட்டர் ரோடு செல்கிறது. இந்த ரோடு ஒரு வழிப்பாதையாக உள்ள நிலையில் போக்குவரத்து விதியை மீறும் வகையில் நஞ்சப்பா பள்ளி பகுதியில் இருந்து கருவம்பாளையம் நோக்கி தினமும் வாகனங்கள் சென்றவண்ணம் உள்ளன. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. 
குறிப்பாக இந்த ரோட்டில் உள்ள நொய்யல் ஆற்று பாலத்தில் எதிரும்,புதிருமாக வாகனங்கள் செல்வதால் வாகனங்கள் அடிக்கடி மோதிக்கொள்கின்றன.  ஏற்கனவே பாலம் குறுகலாக உள்ள நிலையில் இங்கு இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி கார்,ஆட்டோ மற்றும் கனரக வாகனங்களும் எதிர் திசையில் செல்கின்றன. இதனால் பாலத்தில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. 
திருப்பி அனுப்பிய போலீசார்
இதன் காரணமாக போலீசார் கடந்த சில தினங்களாக இங்கு ஒரு வழிப்பாதையில் எதிர் திசையில் செல்லும் வாகன ஓட்டிகளை எச்சரித்து திருப்பி அனுப்பி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இங்கு பணியில் ஈடுபட்ட தெற்கு போலீஸ் நிலைய போலீசார் ஏராளமான வாகனங்களை திருப்பி அனுப்பினர். வேகமாக வரும் வாகனங்கள் பாலத்திற்குள்ளாகவே திரும்புவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. விபத்து ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. எனவே, பாலத்திற்கு வரும் முன்னரே வாகனங்களை தடுத்த நிறுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story