உளுந்தூர்பேட்டை பகுதியில் மழை விட்டும் வடியாத வெள்ளத்தால் நீங்காத சோகம் பல்லாங்குழிகளான நான்கு வழிச்சாலை
உளுந்தூர்பேட்டை பகுதியில் மழை விட்டும் வடியாமல் இருக்கும் வெள்ளத்தால் மக்கள் சோகத்தில் உள்ளனர். மேலும் நான்கு வழிச்சாலைகள் பல்லாங்குழிகளாக மாறி இருக்கிறது.
உளுந்தூர்பேட்டை,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடக்கத்தில் பருவமழை சற்று நிதானத்தை கடைபிடித்தாலும், அதன் பின்னர் பெருமழையாக பொழிந்தது. அந்த வகையில் குமரி கடலில் நிலவிய மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்த மழை நேற்று ஓய்ந்து காணப்பட்டது. வானம் மேக மூட்டங்கள் இன்றி, வறண்ட வானிலையே நீடித்தது.
ஆனால், கடந்த 4 நாட்களாக பெய்த மழை மாவட்டத்தில் ஏற்படுத்திய பாதிப்புகள் ஏராளமாகும். இன்னமும் மழை பாதிப்பில் இருந்து மக்கள் மீள முடியாமல் தவித்து வருகிறார்கள்.
அழுகும் நிலையில் பயிர்கள்
அந்த வகையில் உளுந்தூர்பேட்டை பகுதியில் பல கிராமங்களை மழைநீர் சூழ்ந்தது. குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர், வீடுகளுக்குள்ளும் அழையா விருந்தாளியாக எட்டிபார்த்தது.
இந்த தண்ணீர் இன்னும் வெளியேற மனமின்றி, அங்கேயே நிரந்தரமாக தங்கி விட்டதால், அப்பகுதி மக்கள் பரிதவித்து போயிருக்கிறார்கள். வீட்டிலும் இருக்க முடியாமல், வெளியேயும் செல்ல முடியாமல் இன்னல்களுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
குறிப்பாக குணமங்கலம் கிராமத்தில் சமத்துவபுரத்தில் மழைநீர் புகுந்தது. இந்த பகுதியில் எல்லாம் தண்ணீரை வெளியேற்றும் பணியை உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் எலவனாசூர்கோட்டை, கிளியூர் குன்னத்தூர் சேந்தநாடு உள்ளிட்ட பல கிராமங்களில் கனமழையின் காரணமாக வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன. பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில் கரும்பு, நெல் உள்ளிட்ட வேளாண் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை
இதேபோல் சாலைகளும் பலத்த சேதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. உளுந்தூர்பேட்டை பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே பல்லாங்குழிகள் போன்று பள்ளங்கள் உருவாகி இருக்கிறது.
மழைக்கு கலந்தாலாகி கிடக்கும் இந்த சாலையின் வழியாக, இரவு நேரங்களில் அதிவேகத்தில் செல்லும் போது, விபத்தில் சிக்கி உயிர்பலி ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தினசரி ஆயிரகணக்கான வாகனங்கள் செல்லும் இந்த சாலையை உடனடியாக சரிசெய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story