விடிய, விடிய கொட்டி தீர்த்த மழை
மாவட்டம் முழுவதும் விடிய, விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது.
திண்டுக்கல்:
வெளுத்துகட்டிய மழை
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்திலும் கடந்த ஒரு மாதமாக தொடர்ச்சியாக மழை பெய்கிறது. எனவே ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. விவசாயிகள் உற்சாகத்துடன் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தொடர் மழையால் பல பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. அதில் ஒருசில பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது.
இதற்கிடையே திண்டுக்கல்லில் நேற்று காலை 5 மணிக்கு லேசான மழை பெய்யத் தொடங்கியது. மேலும் சிறிது நேரத்தில் அது பலத்த மழையாக மாறியது. இந்த மழை காலை 7 மணி வரை விடாமல் வெளுத்து வாங்கியது. இதனால் முக்கிய சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திண்டுக்கல் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. அந்த மழை மேலும் சில மணி நேரம் நீடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் விசாகன் அறிவித்தார்.
இதற்கிடையே 7.30 மணிக்கு மேல் மழையின் வேகம் சற்று குறைந்தது. எனினும் விடாமல் சாரல் மழை பெய்தபடி இருந்தது. இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. மேலும் இரவு வரை விட்டு விட்டு சாரல் மழை பெய்தபடி இருந்தது. மாவட்டம் முழுவதும் சாரல் மழையில் நனைந்தபடி மக்கள் அன்றாட பணிகளை மேற்கொண்டனர்.
120.3 மி.மீ. மழை
அதேநேரம் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை மாவட்டம் முழுவதும் மொத்தம் 120.3 மி.மீ. மழை பெய்தது. இதில் கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் 27.5 மி.மீ., போட்கிளப்பில் 26 மி.மீ., நத்தத்தில் 18.5 மி.மீ., நிலக்கோட்டையில் 16.4 மி.மீ., சத்திரப்பட்டியில் 15.1 மி.மீ., திண்டுக்கல்லில் 11.8 மி.மீ., பழனியில் 4 மி.மீ., காமாட்சிபுரத்தில் 1 மி.மீ. மழை பதிவானது.
நத்தம் பகுதியில் தொடர்மழை பெய்து வருகிறது.
அதன்படி நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதன்காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதில், இடையபட்டி-சிவக்காடு செல்லும் சாலை முற்றிலும் சேதம் அடைந்து துண்டிக்கப்பட்டது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இடையப்பட்டி கிராமத்தில் வசிக்கிற 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உரிய பாதை வசதி இல்லாமல் பரிதவித்து வருகின்றனர். ஆபத்தான முறையில் காட்டாற்று வெள்ளத்தை கடந்து செல்கின்றனர்.
இதேபோல் சாணார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. திரும்பிய திசையில் எல்லாம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வேடசந்தூரில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சாலைத்தெரு, வடமதுரைரோடு உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் கழிவுநீர் நேருஜிநகரில் குடியிருப்பு பகுதியில் குளம்போல தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டி ஊராட்சியில் பூவம்பட்டி கிராமம் உள்ளது. இங்கு சமீபத்தில் புதிதாக குளம் வெட்டப்பட்டது. குளம் வெட்டிய நாள் முதல் நிரம்பாமல் இருந்து வந்தது. தற்போது பெய்த தொடர் மழையால் அந்த குளம் நிரம்பி உள்ளது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story