மூலவைகை, யானைகஜம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
கடமலை-மயிலை பகுதியில் பெய்த கனமழையால் மூலவைகை, யானைகஜம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கடமலைக்குண்டு:
கடமலை-மயிலை பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த பெய்து வருகிறது. குறிப்பாக வெள்ளிமலை வனப்பகுதியில் நேற்று முன்தினம் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் மூலவைகை ஆற்றில் நேற்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளிமலை வனப்பகுதியில் தொடர்ந்து பெய்து வருவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இதையடுத்து கடமலை-மயிலை ஒன்றிய அதிகாரிகள், மூலவைகை ஆற்றங்கரையோர கிராமங்களில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் மேகமலை வனப்பகுதியில் பெய்த கனமழையால் கோம்பைத்தொழு அருகே உள்ள மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தடுப்பு கம்பிகளை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் வனத்துறையினர் மற்றும் மயிலாடும்பாறை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
மேலும் விருதுநகர் மாவட்டம் சாப்டூர் மற்றும் சதுரகிரி மலைப்பகுதியில் பெய்த கனமழையால், தேனி மாவட்டம் உப்புத்துறை அருகே உள்ள யானைகஜம் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளநீர் வாய்க்கால்பாறை, தங்கம்மாள்புரம் கிராமங்களை கடந்து மூலவைகை ஆற்றில் கலந்து வருகிறது.
இதற்கிடையே வெள்ளப்பெருக்கு காரணமாக மூலவைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகளில் நீர் மாசடைந்து காணப்படுகிறது. எனவே காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் தடுக்கும் வகையில் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என அந்தந்த ஊராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story