கொடுக்கல்-வாங்கல் தகராறில் விவசாயி அடித்துக்கொலை
கன்னிவாடி அருகே கொடுக்கல்-வாங்கல் தகராறில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கன்னிவாடி:
விவசாயி
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள வீரப்புடையான் பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் என்ற சின்னக்காளை (வயது 48). விவசாயி. அவருடைய மகன் மணிகண்டன் (20). இவர், திருப்பூரில் உள்ள பல்பொருள் அங்காடியில் வேலை செய்து வருகிறார்.
கல்லூரியில் படிக்கிற தனது தங்கைக்கு செல்போன் வாங்கி கொடுப்பதற்காக, தனது உறவினரான மணிவேல் (21) என்பவரின் வங்கி கணக்கில் மணிகண்டன் ரூ.10 ஆயிரம் அனுப்பி வைத்தார்.
ஆனால் மணிவேல், மணிகண்டனின் தங்கைக்கு செல்போன் வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் அவர் திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக சின்னக்காளைக்கும், மணிவேல் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அடித்து கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மணிவேல் வீட்டுக்கு சென்ற சின்னக்காளை, தனது மகன் அனுப்பிய பணம் குறித்து கேட்டதாக தெரிகிறது. இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அதன்பிறகு சின்னக்காளை வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து அவருடைய மனைவி முத்துலட்சுமி விடிய, விடிய சின்னக்காளையை தேடினார். இருப்பினும் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்த சூழ்நிலையில் நேற்று காலை மதுரைவீரன் கோவில் அருகே அடித்து கொல்லப்பட்ட நிலையில் சின்னக்காளை பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சோமசுந்தரம், கன்னிவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெள்ளையப்பன், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
வாலிபர் கைது
பின்னர் போலீசார், சின்னக்காளையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கன்னிவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு பிறகு மணிவேல் கைது செய்யப்பட்டார். கைதான அவர், கொடுக்கல்-வாங்கல் தகராறில் தென்னை மட்டையால் சின்னக்காளையை அடித்து கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.
இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story