பெரியகுளத்தில் குப்பைகளை கொட்டுவதால் மாசடையும் வராகநதி
பெரியகுளத்தில் குப்பைகளை கொட்டுவதால் வராகநதி மாசடைந்து வருகிறது.
பெரியகுளம்:
பெரியகுளம் நகரின் மையப்பகுதியில் வராகநதி ஓடுகிறது. பெரியகுளம் வடகரை மற்றும் தென்கரை பகுதியை இணைக்கும் வகையில் ஆற்றின் குறுக்கே ஆடு பாலம் உள்ளது. இந்த பாலத்தை ஓட்டிய ஆற்றின் கரைகளில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் வராகநதி மாசடையும் சூழல் உள்ளது. சமீபத்தில் பெய்த தொடர் மழையால் ஆற்றில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. இந்த தண்ணீர் பெரியகுளம் பகுதியில் உள்ள குளங்களுக்கு செல்கிறது.
இந்தநிலையில் பெரியகுளம் நகரில் உள்ள வராகநதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் ஆற்றில் செல்லும் தண்ணீர் மாசடைந்து, மற்ற குளங்களுக்கு செல்கிறது. இதனால் அந்த தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.
குறிப்பாக பெரியகுளம் பகுதியில் உள்ள ஓட்டல், கடைகளில் இருந்து இறைச்சி உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் ஆற்றில் கொட்டப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. இந்தநிலையில் ஆடு பாலத்தின் தென்கரையில் விநாயகர் கோவிலுக்கு பின்புறம் ஆற்றை ஒட்டி இருந்த கழிப்பறை அகற்றப்பட்டது. மேலும் அந்த இடத்தில் தடுப்பு வேலி அமைக்கப்படவில்லை. இதை பயன்படுத்தி அந்த பகுதியில் ஆற்றின் கரையில் மலைப்போல் குப்பைகளை கொட்டப்பட்டுள்ளன.
இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதுடன், ஆற்றில் கழிவுகள் கலந்து மாசடைந்து வருகிறது. எனவே ஆற்றின் கரையில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story