தூர்வாரப்படாததால் நிரம்பாத செட்டிகுளம் ஏரி
தூர்வாரப்படாததால் நிரம்பாத செட்டிகுளம் ஏரி
சேந்தமங்கலம்,டிச.1-
சேந்தமங்கலம் அருகே தூர்வாரப்படாததால் செட்டிகுளம் ஏரி நிரம்பவில்லை. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
செட்டிகுளம் ஏரி
சேந்தமங்கலம் அருகே வாழவந்தி கோம்பை ஊராட்சியில் செட்டிகுளம் உள்ளது. சுமார் 50 ஏக்கர் பரப்பில் உள்ள இந்த ஏரி அடிவாரத்தில் காணப்படும் முதல் ஏரி. கொல்லிமலையில் பலத்த மழை பெய்யும் போதெல்லாம் அங்கிருந்து வரும் வெள்ள நீர் பல ஆறுகளின் வழியாக அடிவாரத்தில் உள்ள ஏரிகளை நிரப்பி செல்லும்.
அந்தவகையில் சேந்தமங்கலம் பகுதியில் பல ஏரிகள் நிரம்பியும் செட்டி குளம் ஏரி மட்டும் நிரம்பாமல் உள்ளது. செட்டிகுளம் ஏரிக்குள் உள்ள வெட்டுக்குழியில் மட்டும் மழைநீர் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நிரம்பவில்லை
கொல்லிமலை அடிவார பகுதியான தாதன்கோம்பை பகுதி வழியாக சீட்டி ஆறு, குண்டு மடுவு ஆறு, உப்பாறு ஆகிய ஆறுகளின் வெள்ளநீர் செட்டிகுளம் ஏரிக்கு வந்தடையும். தற்போது அங்கு குறைந்த அளவு தண்ணீர் வருகிறது. அதுவும் ஏரியின் ஒரு பகுதியில் மட்டும் தேங்கி கிடக்கிறது. மற்ற பகுதி கருவேல மரங்களாக காட்சி அளிக்கிறது.
செட்டிகுளம் ஏரி நிரம்பாததால், ஏரி பாசனத்தை நம்பி உள்ள அம்மண பள்ளம், கருங்காடு, கோட்டயம் குட்டை, கருவாட்டாறு, பூச்சனாங்குட்டை, சின்ன பள்ளம் பாறை, அணி கோம்பை போன்ற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தூர்வார கோரிக்கை
தூர்வாரப்படாததால் ஏரியின் பள்ளமான பகுதியில் மட்டும் தண்ணீர் தேங்கி உள்ளது. எனவே தண்ணீர் தேங்கிய பகுதியில் இருந்து கால்வாய் வெட்டி மற்ற பகுதிகளுக்கும் தண்ணீர் கொண்டு செல்ல விவசாயிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அது எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பது தெரியவில்லை.
இருந்தாலும் இதுதொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து, செட்டிகுளத்தை தூர்வாரி நிரம்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story