மழையினால் வேளாண் பயிர்கள் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
மழையினால் பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
புதுக்கோட்டை:
ரூ.30 ஆயிரம் நிவாரணம்
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் கவிதாராமு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக பேசினர்.
மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் பாதிக்கப்பட்ட நெல், மக்காச்சோளம், தோட்டக்கலை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன் தலைமையில் விவசாயிகள் பலர் சேதமடைந்த பயிர்களுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையிட்டு, கலெக்டரிடம் மனு அளித்து இதே கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
தடுப்பணைகள் தேவை
கூட்டத்தில் கீரனூரை சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் பேசுகையில், ‘மாவட்டத்தில் காட்டாறுகளில் தடுப்பணைகள் அதிகளவில் ஏற்படுத்தி நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். தென் இந்திய நதிகள் இணைப்பு சங்கத்தை சேர்ந்த மணிகண்டன் பேசுகையில், ‘கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட வேண்டும்’ என்றார். இந்திய விவசாயிகள் சங்க மாநில செயலாளர் தனபதி பேசுகையில், ‘வேளாண் சட்டம் திரும்ப பெற்றதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
பயிர் காப்பீடுகளில் குளறுபடிகளை களைய வேண்டும். காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு திட்ட பணிகளில் குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் நிறைவேற்ற வேண்டும்’ என்றார்.
100 நாள் வேலைத்திட்டம்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் சங்கர் பேசுகையில், ‘மாவட்டத்தில் மழை வெள்ள நீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. இதனை தடுக்க தடுப்பணைகளை அதிகப்படுத்த வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ரூ.273 முழுமையாக வழங்கப்படவில்லை. மழையினால் பாதிப்புக்குள்ளான விவசாய தொழிலாளர்களுக்கு 100 நாட்கள் முழுமையான வேலையும், அதற்கான கூலியையும் வழங்க வேண்டும்’ என்றார். இதேபோல விவசாயிகள் பலர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பேசினர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி, வேளாண் இணை இயக்குனர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் உமாமகேஸ்வரி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிரம்பிய கூட்டரங்கம்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் 3-வது தளத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். மழை பாதிப்பு, பயிர் காப்பீடு, நிவாரண தேவை உள்ளிட்ட கோரிக்கைகளை எடுத்துரைப்பதற்காக வந்திருந்தனர். இதனால் கூட்டரங்கு முழுவதும் நிரம்பியது. கூடுதலாக இருக்கைகள் போட ஏற்பாடு செய்யப்பட்டன.
Related Tags :
Next Story