வாலிபருக்கு ஆயுள்தண்டனை


வாலிபருக்கு ஆயுள்தண்டனை
x
தினத்தந்தி 30 Nov 2021 11:11 PM IST (Updated: 30 Nov 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

கொடுக்கல் வாங்கல் தகராறில் டிரைவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ராமநாதபுரம் கோர்ட்டில் வாலிபருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

ராமநாதபுரம், 
கொடுக்கல் வாங்கல் தகராறில் டிரைவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ராமநாதபுரம் கோர்ட்டில் வாலிபருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
தகராறு
ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ளது குப்பான்வலசை. இந்த ஊரைச் சேர்ந்தவர் முத்து என்பவரின் மகன் முத்துச்சாமி என்ற அகமது (வயது46). இவர் வழுதூர் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவருக்கு கடன் கொடுத்து இருந்தாராம். இந்த பணத்தினை அவர் தரமறுத்து வந்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 
இந்தநிலையில் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந் தேதி மேற்கண்ட முத்துச்சாமியை சிலர் செல்போனில் அழைத்து ரவி பணம் கொடுத்து அனுப்பி உள்ளார் வந்து வாங்கி செல்லுமாறு கூறியுள்ளனர். 
இதனால் முத்துச்சாமி தனது மருமகனான குப்பான் வலசையை சேர்ந்த தமிழரசன் மகன் ராஜா (25) என்பவ ருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். சாத் தான்குளம் குண்டூரணி கோவில் அருகில் சென்றபோது அங்கு நின்றிருந்த 5 பேர் கொண்ட கும்பல் முத்துச்சாமி மீது மிளகாய் பொடியை தூவி தாக்கி உள்ளனர். இதனை கண்ட ராஜா தப்பி ஓடிவிட்டார். 
கொலை
அதனை தொடர்ந்து அந்த கும்பல் முத்துச்சாமியை ஓட ஓட விரட்டி அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கி கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராஜா அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து அம்மன்கோவிலை சேர்ந்த பஞ்சவர்ணம் மகன் பாஸ் என்ற பாஸ்கரன் (37), வாலாந்தரவை ஜெகநாதன் மகன் ஜெயகிருஷ்ணன் (36), கோபால் மகன் தினேஷ் (29), அன்பழகன் மகன் அர்ச்சுணன் (29), சாத்தான்குளம் முனியன்வலசை கிருஷ்ணமூர்த்தி மகன் சதீஷ் (24) ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் கூடுதல்  மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி ஸ்ரீனிவாசன் மேற்கண்ட ஜெயகிருஷ்ணன், தினேஷ், அர்ச்சுனன் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் அதனை கட்ட தவறினால் மேலும் 6 மாத ஜெயில் தண்டனையும் விதித்து கடந்த அக்டோபர் மாதம் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் சதீஷ் என்பவரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். 
ஆயுள் தண்டனை
மேலும், இந்த வழக்கில் முதல் குற்றவாளியான பாஸ் என்ற பாஸ்கரன் ஜாமீனில் வெளியில் வந்து தலைமறைவாகி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருந்ததால் அவர் மீதான தண்டனை மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது. இதனிடையே அவர் நீதிமன்றத்தில் சரணடைந்து சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இதனை தொடர்ந்து நேற்று மேற்கண்ட வழக்கில் அவர் மீதான தண்டனை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 
இதன்படி நேற்று அவர் பலத்த பாதுகாப்புடன் ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட கோர்ட்டிற்கு அழைத்து வரப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அதனை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் ஜெயில் தண்டனையும் விதித்து நீதிபதி ஸ்ரீனிவாசன் தீர்ப்பு கூறினார்.

Next Story