பஸ் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் உள்பட 15 பேர் படுகாயம். ஒருவர் பலி


பஸ் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் உள்பட 15 பேர் படுகாயம். ஒருவர் பலி
x
தினத்தந்தி 1 Dec 2021 12:23 AM IST (Updated: 10 Dec 2021 4:41 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே தனியார் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். ஒருவர் பலியானார்.

வேலூர்,

வேலூரில் இருந்து நேற்று காலை ஆற்காடு நோக்கி தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சில் கல்லூரி மாணவ-மாணவிகள் அதிகளவில் இருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் மாணவர்கள் மற்றும் பயணிகளும் தொங்கியபடி பயணம் செய்தனர். வேலூரை அடுத்த பெருமுகை ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தபோது திடீரென மோட்டார்சைக்கிளில் சென்ற நபர் சாலையை கடக்க முயன்றார். இதைகவனித்த பஸ் டிரைவர் மோட்டார்சைக்கிள் மீது மோதாமல் இருக்க பஸ்சை திருப்பி நிறுத்த முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் இடதுபுறம் உள்ள சர்வீஸ் சாலையை ஒட்டியுள்ள இரும்புத் தடுப்புகளில் மோதியது. வேகமாக வந்ததால் உடனடியாக பஸ்சை நிறுத்த முடியவில்லை. சுமார் 50 மீட்டருக்கு மேல் இரும்பு தடுப்புகளை உடைத்து சென்று நின்றது. அப்போது படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த மாணவர்கள் மற்றும் பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். 

இந்த விபத்தில் தில்கணேஷ் (18), தீபக் (18), சூர்யா (25), சுரேஷ்குமார் (21), ராஜ்குமார் (18), தினேஷ் (18), பிரபாகரன் (19), ஜாவித் (19), சந்துரு (19), மோகன் (20) உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் கல்லூரி மாணவர்கள்.
படுகாயம் அடைந்தவர்களில் சிலர் சுயநினைவை இழந்து சாலையில் ரத்தவெள்ளத்தில் கிடந்தனர். சிலர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். பலர் வலியால் கதறி துடித்தனர். விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்களும் அங்கு கூடினர். இதையடுத்து சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

உடனடியாக 5-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு, காயமடைந்தவர்களை மீட்டு தனியார் மற்றும் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்தனர். அவர்களில் ஒருவர் பலியானார்.

இதுபற்றி தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பலர் ஆஸ்பத்திரிக்கு அலறியடித்தபடி வந்தனர். ஆஸ்பத்திரி வளாகத்தில் ஏராளமானோர் குவிந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய பஸ் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. அதன்பிறகு போக்குவரத்து சீரானது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story