பொதுப்பணித்துறை பெண் என்ஜினீயர் ‘திடீர்’ கைது
லஞ்சப்புகாரில் சிக்கிய பொதுப்பணித்துறை பெண் என்ஜினீயர் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
வேலூர்
லஞ்சப்புகாரில் சிக்கிய பொதுப்பணித்துறை பெண் என்ஜினீயர் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பெண் என்ஜினீயர்
வேலூர் மண்டல பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (தொழில்நுட்பகல்வி) அலுவலகம் வேலூர் தொரப்பாடி தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ளது. இந்த அலுவலக கட்டுப்பாட்டில் வேலூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்பட 9 மாவட்டங்கள் உள்ளன. இதன் செயற்பொறியாளராக ஷோபனா (வயது 57) என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இவர் அரசு கல்லூரிகளில் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்குதல் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்வார்.
ரூ.2 கோடிக்கு மேல் பணம், நகை பறிமுதல்
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி கட்டிட ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த மாதம் 2-ந் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவரின் காரில் இருந்து ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து ஷோபனா தங்கியிருந்த குடியிருப்பு மற்றும் அவரின் சொந்த ஊரான ஓசூரிலும் சோதனை செய்யப்பட்டது.
அதில் ரூ.2 கோடிக்கு மேல் பணம், நகைகள், வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. மேலும், பல வங்கிக் கணக்குப் புத்தகங்கள், வங்கி லாக்கர் சாவி ஆகியவற்றையும் பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
திடீர் கைது
இதையடுத்து ஷோபனா திருச்சி வட்ட பொதுப்பணித்துறையில், கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துணைக் கண்காணிப்புப் பொறியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அவர் பணியில் சேராமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று வேலூரில் ஷோபனாவிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை திடீரென கைது செய்தனர். தொடர்ந்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story