நடிகை ஸ்ருதி ஹரிகரன் தொடர்ந்த பாலியல் வழக்கில் ‘நடிகர் அர்ஜூன் குற்றமற்றவர்’
நடிகை ஸ்ருதி ஹரிகரன் தொடர்ந்த பாலியல் வழக்கில் பெங்களூரு கோர்ட்டில் போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில் நடிகர் அர்ஜூன் குற்றமற்றவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பெங்களூரு: நடிகை ஸ்ருதி ஹரிகரன் தொடர்ந்த பாலியல் வழக்கில் பெங்களூரு கோர்ட்டில் போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில் நடிகர் அர்ஜூன் குற்றமற்றவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அர்ஜூன் மீது பாலியல் புகார்
தமிழ், கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் அர்ஜூன் சர்ஜா. இவர் மீது பெங்களூரு கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடிகை ஸ்ருதி ஹரிகரன் என்பவர் புகார் அளித்தார். அந்த புகாரில் கன்னடத்தில் வெளியான விஸ்மயா (தமிழில் நிபுணன்) படத்தில் அர்ஜூனுடன் சேர்ந்து நடித்த போது எனக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறி இருந்தார்.
அதன்பேரில் அர்ஜூன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை அர்ஜூன் மறுத்தார். இந்த வழக்கில் நடிகர் அர்ஜூன், நடிகை ஸ்ருதி ஹரிகரன் மற்றும் பிற நடிகர்கள், நடிகைகளிடம் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்று இருந்தனர்.
ஆதாரம் இல்லை
இந்த வழக்கு குறித்து 3 ஆண்டுகளாக போலீசார் விசாரணை நடத்தியும் நடிகர் அர்ஜூன் மீது ஸ்ருதி ஹரிகரன் கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இதனால் இந்த வழக்கில் அர்ஜூன் குற்றமற்றவர் என்று கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நடிகை ஸ்ருதி ஹரிகரனுக்கு போலீசார் நோட்டீசும் அனுப்பி வைத்து இருந்தனர்.
இந்த நிலையில் நடிகர் அர்ஜூன் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து தங்கள் நடத்திய விசாரணை அறிக்கையை பெங்களூரு கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ‘பி’ அறிக்கையை தாக்கல் செய்தனர். அதில் நடிகர் அர்ஜூன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர் குற்றமற்றவர் என்று போலீசார் கூறி இருந்தனர். இதன்மூலம் அர்ஜூனும், அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
எப்போதும் ஜென்டில்மேன்
இதுகுறித்து அர்ஜூன் கூறும்போது, ‘நான் இந்த மாதிரியான காரியங்களை செய்பவன் அல்ல. என் மீது ஏன் இந்த குற்றச்சாட்டு எழுந்தது என்பதே தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் ஒரு சட்டம் உள்ளது. இங்கு சட்டத்தை விட யாரும் பெரியவர்கள் இல்லை’ என்று கூறினார்.
நடிகர் அர்ஜூனின் உறவினரும், கன்னட நடிகருமான துருவ் சர்ஜா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் கொசு மட்டையில் சிக்கி கொசு உயிரிழக்கும் காட்சிகள் இடம் பெற்று இருந்தது. மேலும் நியாயம் பாதுகாக்கப்பட்டு உள்ளது என்றும் கூறியுள்ளார். நடிகை மேக்னா ராஜ் தனது பதிவில் ‘அர்ஜூன் எப்போதும் ஜென்டில்மேன்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
Related Tags :
Next Story