மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவனின் லாக்கரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை


மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவனின் லாக்கரில்  லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
x
தினத்தந்தி 1 Dec 2021 1:48 AM IST (Updated: 1 Dec 2021 1:48 AM IST)
t-max-icont-min-icon

மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வங்கி லாக்கரில், சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

சேலம்
மாநில கூட்டுறவு வங்கி தலைவர்
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள புத்திரகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 57). இவர் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் மற்றும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக உள்ளார்.
இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் பேரில் கடந்த அக்டோபர் மாதம் 22-ந்தேதி அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணராஜன் தலைமையில் சேலம் மற்றும் அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள வங்கிகளில் இளங்கோவனின் வங்கி லாக்கரில் போலீசார் சோதனை நடத்தினர்.
கைப்பற்றப்படவில்லை
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது:-
சொத்து குவிப்பு புகாரின் பேரில் இளங்கோவன் வீடு, அலுவலகங்களில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டது. தற்போது அவரது வங்கி லாக்கரில் சோதனை நடத்தப்பட்டது. அதில் இருந்து ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அதே நேரத்தில் அதில் இருந்த ஆவணங்களின் விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளன.
6 இடங்களில் அவரது வங்கி லாக்கரில் சோதனை நடத்த வேண்டும் என்று, சேலம் ஊழல் தடுப்பு கண்காணிப்பு கோர்ட்டில் அனுமதி பெற்று அவரது வங்கி லாக்கர் சாவி பெறப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story