ககன்யான் திட்டத்தை குஜராத்திற்கு மாற்றினால் போராட்டம்; காங்கிரஸ் அறிவிப்பு
இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தை குஜராத்திற்கு மாற்றினால் காங்கிரஸ் போராட்டம் நடத்தும் என்று மத்திய அரசுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு: இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தை குஜராத்திற்கு மாற்றினால் காங்கிரஸ் போராட்டம் நடத்தும் என்று மத்திய அரசுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பயப்பட தேவை இல்லை
மந்திரி ஈசுவரப்பா, முருகேஷ் நிரானி முதல்-மந்திரி ஆவார் என்று கூறியுள்ளார். இதன் மூலம் ஆளும் பா.ஜனதாவில் எதுவும் சரி இல்லை என்று தெரிகிறது. பசவராஜ் பொம்மை, ஈசுவரப்பாவை நீக்க வேண்டும் அல்லது பசவராஜ் பொம்மை பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
கர்நாடகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் தான் உள்ளது. அதனால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை. இந்த அரசு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் நோய் பரவலை தடுக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். ஒமிக்ரான் வைரஸ் இன்னும் கர்நாடகத்தில் பரவவில்லை. அதனால் யாரும் பயப்பட வேண்டிய தேவை இல்லை.
போராட்டம் நடத்துவோம்
இந்திரா காந்திக்கும், கர்நாடகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. அவர் அரசியலில் மறுவாழ்வு பெற்றது கர்நாடகத்தில் இருந்து தான். ராஜீவ்காந்தி இளைஞர் காங்கிரஸ் மாநாட்டை இங்கு நடத்தினார். சோனியா காந்தி பல்லாரியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்திரா காந்தியின் புகைப்பட கண்காட்சியை பெங்களூருவில் தொடங்கியுள்ளோம். ஒரு வாரகாலம் இந்த கண்காட்சியை பார்க்க அனுமதிக்கப்படும்.
இஸ்ரோ அமைப்பை முழுவதுமாக தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. ககன்யான் திட்டத்தை குஜராத்திற்கு மாற்ற முயற்சி செய்கிறார்கள். அதனால் இஸ்ரோவில் ஊழியர்கள்-அதிகாரிகள் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை கன்னடர்கள் ஏற்க மாட்டார்கள். கர்நாடகத்தில் 15 ஆயிரம் விஞ்ஞானிகள் உள்ளனர். இஸ்ரோவை குஜராத்திற்கு மாற்றினால் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்துவோம்.
பரிசோதனைக்கு கட்டணம்
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் கொரோனா பரிசோதனைக்கு கட்டணமாக ரூ.3 ஆயிரம் வரை வசூலிக்கிறார்கள். இது மிக அதிகம். மக்கள் ஏற்கனவே வேதனையில் உள்ளனர். அவர்களுக்கு மேலும் நெருக்கடி கொடுப்பது சரியல்ல.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Related Tags :
Next Story