சங்ககிரியில் குடும்பசெலவுக்கு பணம் தராத கணவரை கண்டித்து தீக்குளிக்க முயன்ற பெண் போக்குவரத்து போலீசார், பொதுமக்கள் காப்பாற்றினர்
சங்ககிரியில் குடும்பசெலவுக்கு பணம் தராத கணவரை கண்டித்து தீக்குளிக்க முயன்ற பெண்ணை போக்குவரத்து போலீசாரும், பொதுமக்களும் காப்பாற்றினர்.
சங்ககிரி.
குடும்ப செலவுக்கு பணம்
எடப்பாடி தாலுகா வெள்ளரி வெள்ளி கிராமம் கல்லப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர் பள்ளிபாளையம் அரசு போக்குவரத்து கழக பஸ்சில் கண்டக்டராக பணி புரிந்து வருகிறார். இவருடைய மனைவி ஜீவா (வயது 46). இவர் தையல் தொழில் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
மனைவி ஜீவாவிடம் குடும்பசெலவுக்கு வெங்கடாசலம் தனது சம்பள பணத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட கொடுப்பது இல்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து ஜீவா, சங்ககிரி அனைத்து மகளிர் போலீசில் புகார்செய்ய முடிவு எடுத்தார்.
இதையடுத்து சங்ககிரிக்கு புறப்பட்ட அவர், வரும் போது வீட்டில் இருந்து மண்எண்ணை கேனையும் எடுத்துக்கொண்டு வந்தார்.
தீக்குளிக்க முயற்சி
சங்ககிரிக்கு நேற்று காலை வந்து சேர்ந்த அவர், திருச்செங்கோடு பிரிவு ரோட்டில் நடந்து வந்தார். அப்போது திடீரென ஜீவா தான் கையில் வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து தலை மீது ஊற்றினார்.
பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதை பார்த்து அந்த பகுதியில் போக்குவரத்து சரிசெய்யும் பணியில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார் மற்றும் பொதுமக்கள் ஓடிவந்து அந்த பெண்ணிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கி வீசினர். மேலும் அவர் மீது தண்ணீரை ஊற்றினார்கள்.
அதன்பிறகு சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அவரை ஒப்படைத்தனர்.
போலீசில் புகார்
இதைத்தொடர்ந்து சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா, ஜீவா அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் வெங்கடாஜலம் இதுநாள் வரை சம்பள பணத்தை எனக்கு கொடுப்பது இல்லை. நான்தங்கிஉள்ள வீட்டை அடிக்கடி பூட்டிவிட்டு சென்று விடுகிறார். சமையல் செய்ய விடாமல் சமையல் கியாஸ் சிலிண்டரை எடுத்து மறைத்து வைத்து கொள்கிறார். ஆனால் நான் தையல் தொழிலில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குழந்தைகளை காப்பாற்றி வந்தேன். எனக்கு 2 கால் முட்டி தேய்ந்து விட்டது. 2 கண்களும் தெரியவில்லை. எனவே எனது கணவரை அழைத்து விசாரணை செய்து நீங்கள் எனக்கு வழிகாட்ட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த புகாரின் பேரில் ஜீவாவின் கணவர் வெங்கடாசலத்தை அழைத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story